“டிஸ்னி உலகின் சிறந்த சூழலியல் பாதுகாவலர்கள் பதினைந்து பேரைத் தேர்வுசெய்து விருது வழங்கி கௌரவித்தது. அவருக்கும் விருது வழங்கினார்கள். அதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அழைத்திருந்தேன். வாழ்த்துகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அதைத் தவிர்த்துவிட்டு, அவர் சமீபத்தில் பார்த்த இரண்டு மீன்பிடிப் பூனைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார்”- சர்வதேச சூழலியல் இதழான Sanctuary Asia-வில் அப்பா ராவ் குறித்து எழுதிய மலாய்கா வெஸ்.
அவர் அப்படித்தான். அதனால்தான் அவர் இந்தியாவின் அலையாத்தி மனிதர். மலாய்கா வெஸ் என்ற பத்திரிகையாளர் கூறியது போலவே அப்பா ராவுக்கு விருதுகளைப் பற்றிக் கவலையில்லை. அவருடைய ஞாபகமெல்லாம், கிருஷ்ணா நதியில் அமைந்துள்ள சதுப்புநிலக் காடுகளைப் பற்றியும் அதில் வாழும் அந்த உயிரினங்களைப் பற்றியதும்தான். அதனால்தான், அவரால் 11,000 ஹெக்டேர் பரப்பளவு சதுப்புநிலப் பகுதியை மீட்டெடுக்க முடிந்தது. அதன்மூலம் அங்கு அழிந்துகொண்டிருந்த மீன்பிடிப் பூனைகளின் வாழிடங்களை மீட்டெடுத்து அவற்றையும் காப்பாற்ற முடிந்தது. அதனால்தான், இப்போதுவரை பள்ளிகளில் தொடங்கி பொதுமக்கள்வரை அலையாத்திக் காடுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அவரால் ஈடுபட முடிகிறது.
ஆசியாவின் காட்டுப் பூனைகளிலேயே மிகப் பெரிய பூனை இந்த மீன்பிடிப் பூனைதான். உயிரினங்கள் வரிசையில் சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் விலங்கு. அதிகமாகச் சதுப்புநிலக் காடுகளைச் சார்ந்து வாழும் இவை, வாழிட ஆக்கிரமிப்புகளாலும் காடழிப்புகளாலும் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது. ஆசியா முழுக்கப் பரவலாகப் பல்வேறு பகுதிகளில் இவற்றுக்கான வாழிடங்கள் அமைந்துள்ளன. வாழிடத் தொடர்ச்சி இல்லாமல் போனாலும் இந்தியா, நேபாள், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, வியட்நாம், லாவோஸ் என்று ஆங்காங்கே சிறு சிறு அளவில் இவற்றின் எண்ணிக்கை இருக்கிறது. இந்தியாவில் இதுவரை ராந்தம்போர், சர் சரோவர், மேற்கு வாங்காளத்தின் சதுப்பு நிலக் காடுகள், ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயம் என்று சில இடங்களில் வெகு அரிதாகப் பார்க்கப்பட்டுள்ளன.
சதுப்புநிலம், ஈரநிலம், அலையாத்திக் காடுகள், ஏரிகளையொட்டிய காடுகள், புல்வெளிக் காடுகளைக் கொண்ட கரையோரங்கள் போன்ற நிலப்பகுதிகளில் இவற்றைப் பார்க்கலாம். இவற்றில் எந்த நிலப்பகுதியாக இருந்தாலும், அங்கு இவைதம் வாழிடத்தை நீர்நிலைகளுக்கு அருகிலேயே அதுவும் எங்கு மீன்கள் அதிகம் கிடைக்குமோ அங்கு அமைத்துக்கொள்ளும். தாழ்வான நிலப்பகுதிகளில், வேகமான நீரோட்டமுள்ள பகுதிகளில்தான் இவை அதிகமாகத் தென்பட்டுள்ளன. பசுமை மாறாக் காடுகள், வெப்பமண்டலக் காடுகள் என்று அவை வாழும் நில அமைப்புகள் பரந்துபட்டதாக இருந்தாலும் வாழிடங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட இடத்தோடு முடிந்துவிடும். அதைத்தாண்டி அவைதம் வாழிடத்தைப் பரவலாக்கிக் கொள்வதில்லை.
கிருஷ்ணா நதியில் அமைந்திருந்த சதுப்புநிலக் காடுகளில் இந்த மீன்பிடிப் பூனைகளின் வாழிடங்கள் அழிந்துகொண்டிருந்தன. அங்கு அதிகமாகிக் கொண்டிருந்த இறால் பண்ணைகள் அங்கிருந்த வனப்பகுதியை அழித்துக் கொண்டிருந்தன. அவற்றை அழித்து, செயற்கைக் குளங்களை உருவாக்கி வியாபார ரீதியிலான இறால் மற்றும் மீன் பண்ணைகள் உருவாகின. அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு முடிவெடுக்கும் இடத்தில் இருந்தவர்களும், அங்கு ஒற்றை உயிரின வளர்ப்பு முறையை அதிகமாக ஊக்குவித்தனர். அவர்கள் அழித்துக்கொண்டிருந்த அலையாத்திக் காடுகள் அங்கிருந்த உயிர்ச்சூழலையும் சேர்த்தே கொண்டு சென்றது. அதன்விளைவாக அந்தப் பகுதியின் புலிகளாகப் பாவிக்கப்படவேண்டிய மீன்பிடிப் பூனைகள் அழிந்து கொண்டிருந்தன.
அப்போது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்தார் அப்பா ராவ். அந்தச் சமயத்தில், கிருஷ்ணா நதியோரங்களில் கைப்பேசி கோபுரங்களை நிறுவுவதற்காக நில அளவைக் குழுவில் ஒருவராக வந்திருந்தார். கிருஷ்ணா மாவட்டத்தின் அசல் காடுகள் அழிந்து வருவதைப் பார்த்தவருக்கு ஏற்பட்ட நெருடலே இன்று அவரை இந்தியாவின் அலையாத்தி மனிதராக மாற்றியது. அந்த நிலப்பகுதியை முற்றிலுமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார். இதைச் சரிசெய்வதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்று அவருக்கு ஏற்பட்ட துடிப்பே அதற்கான உந்துதலாக இருந்தது. அங்குள்ள அலையாத்திக் காடுகளின் தன்மையை அதன் நிலையைப் புரிந்துகொள்ளத் தன் சொந்தச் செலவில், இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சுற்றினார்.
பெரும்பான்மைக் காடுகள் அழிந்துவிட்டிருந்தாலும், ஆங்காங்கே சில திட்டுகளாகச் சில அலையாத்திக் காடுகள் பிழைத்திருந்தன. அவர் கவனித்ததில் அதைவிட முக்கியமானது, ஓட்டுமீன்கள், பாலூட்டிகள், நீர்நில வாழ்விகள் என்று அவ்விடம் பல்லுயிர்ச்சூழல் மிகுந்ததாக இருந்தது. அவையனைத்தின் வாழ்வாதாரமும் தன் கணவரான காடுகளை இழந்து விதவையாகிக் கொண்டிருந்த அந்நிலத்தைச் சார்ந்தே இருந்தது. ஆந்திர பிரதேச மீன்வளத் தொழில் நிறுவனங்கள் அங்கு எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தின, அவர்களின் லாபம் எந்தளவுக்கு அந்நிலத்தைச் சார்ந்திருந்தன போன்றவற்றையும் அவர் புரிந்துகொள்ள முயன்றார்.
அலையாத்திக் காடுகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன. மீன்குஞ்சுகள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அலையாத்திக் காடுகள் கிட்டத்தட்ட பல்லுயிரிகளுக்கான இயற்கைப் பண்ணையாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அங்குச் சிறிய அளவிலிருந்து பெரிய அளவுவரை தொழில்ரீதியாக நடந்துகொண்டிருந்த சுரண்டலை நிறுத்தினால் இருப்பதைவிட அதிகமான மீன் வகைகள் கிடைக்கும் என்பதையும் புரிந்துகொண்டவர் அதைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
1990-களில் அங்கு அதிகமாகத் தொடங்கிய பண்ணை மீன் வளர்ப்பு, பத்தே ஆண்டுகளில் நான்கில் மூன்று பகுதி அலையாத்திக் காடுகளை அழித்துவிட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல நிறுவன முதலீடுகளும் அங்கு அதிகமாகவே ஏற்பட்டிருந்தன. மீன் மற்றும் இறால் பண்ணைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் நடந்தன. ஒருகாலத்தில் அங்கு நண்டுகளைச் சேமித்துக் கொண்டிருந்த மக்கள், மீன்பிடித்துக் கொண்டிருந்த மக்கள் பண்ணை வளர்ப்பு முறையில் ஈடுபட்டு அவர்களுக்கே தெரியாமல் அப்பகுதியின் சூழலியல் சமநிலையைக் கெடுத்துக் கொண்டிருந்தனர். முதலில், அவர்களுக்கு அதைப் புரியவைக்க வேண்டும். அப்பா ராவ் அதற்கான முயற்சியில் இறங்கினார். 2004-ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு அரசுகளும், சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கின. உலக வங்கியின் நிதியுதவியோடு, ஆந்திர பிரதேச கான்துறை அதை மீட்டுருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கின.
இந்த முயற்சியின் ஒருபகுதியாக நடைபெற்ற கிருஷ்ணா மாவட்ட அலையாத்திக் காடுகள் மீட்டுருவாக்கத்தின் சுக்கான்பிடியாகத் திகழ்ந்தார் அப்பா ராவ். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஐந்தாயிரம் மக்களை ஒரு குழுவாக ஒருங்கிணைத்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். ஈர நிலங்களில் அனைவரும் சேர்ந்து அலையாத்தித் தாவரங்களை வளர்க்கத் தொடங்கினார்கள். மீன் எலும்பு மாதிரி நீர்ப்பாசனத் திட்டத்தைப் பயன்படுத்தி நீர்வழித்தடங்களை உருவாக்கினார்கள். இந்த வகை நீர்ப்பாசனத் திட்டம் அது செயல்படுத்தப்படும் நிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் நீரைக் கொண்டுசெல்லும். இதை அமல்படுத்த அங்குள்ள கடல் அலைகளின் ஏற்ற இறக்கங்களை, நீர் அளவுருக்களைத் (Water Parameters) தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நிலவியல் அமைப்புக்கு உரித்தான அலையாத்தித் தாவரங்கள் குறித்த அறிவு வேண்டும். கிருஷ்ணா நீர்ப்பாசனக் கால்வாயோடு இந்தப் பாசன முறை இணைக்கப்பட்டது. உப்பங்கழி நீர்வழித்தடங்களில் நன்னீரும் கடல்நீரும் கலக்கும்போது நீரின் உப்புத்தன்மை அப்பகுதிக்கு ஏற்ற சமநிலைக்கு வரும். இந்தச் செயல்முறை கொஞ்சம் கடினமானது. தொடர்ச்சியான கண்காணிப்பிலேயே இது இருக்கவேண்டும். வண்டல்கள் சேர்வதைத் தூர்வாரிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் வண்டல்கள் சேர்ந்து மீண்டும் அந்நிலத்தைப் பாழாக்கிவிடும்.
இந்த மாதிரியைப் பயன்படுத்தி மீன் எலும்புக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. அடுத்ததாக உப்பங்கழியில் நன்னீரும் கடல் நீரும் கலப்பதிலிருந்த தடைகளை நீக்கி முறையாகக் கலக்கவிட்டு மண்ணில் அதிகமாகியிருந்த உப்புத்தன்மையைக் குறைத்தார்கள். அங்கு நடப்பட்ட அலையாத்தித் தாவர நாற்றுகளைத் தொடர்ச்சியாக ஐந்தாண்டுகளுக்குக் கண்காணித்தார்கள். அதற்கான பயன்களையும் பார்க்கத் தொடங்கினார்கள். இதன்மூலம் சீரழிந்து போயிருந்த சுமார் பத்தாயிரம் ஹெக்டேர்களை மீட்டெடுத்தார்கள். நீர் நாய்கள், குள்ள நரிகள், பல்வேறு பறவையினங்கள், பல்வகை மீன்கள் என்று அந்நிலம் தற்போது முழுமையான அலையாத்திக் காடாக உருவாகியுள்ளது. அங்கு தற்போது கணிசமான அளவில் மீன்பிடிப் பூனைகளையும் பார்க்கமுடிகிறது. 2006-ம் ஆண்டு தொடங்கிய இந்த முயற்சியால் தற்போது கிருஷ்ணா மாவட்டத்தின் 11,000 ஹெக்டேர் அலையாத்திக் காடுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதனோடு அவற்றின் பல்லுயிர்ச்சூழலும் பல்கிப் பெருகியுள்ளன.
ஒரு சமுதாயம், என்னவெல்லாம் உருவாக்கியது என்பதைவிட எதையெல்லாம் பாதுகாத்தது என்பதை வைத்துத்தான் அதன் தனித்துவம் மதிப்பிடப்படும். அந்த மாதிரியானதொரு சமுதாயத்தை உருவாக்கியுள்ள அப்பா ராவ், உண்மையிலேயே இந்தியாவின் அலையாத்தி மனிதர்தான்.
“நாங்கள் செய்ததெல்லாம், வெறும் 25 சதவிகிதம் வேலைதான். மீதி 75 சதவிகிதம் வேலையை இயற்கை செய்துகொண்டது. வேலையைத் தொடங்கிவிட்டாலே போதும், அதன் முழு ஒத்துழைப்பும் கிடைக்கத் தொடங்கிவிடும்” – அப்பா ராவ்.
சின்ன கண்ணன்