பூமி முழுக்க பல்வேறு வகையான சூழலியல் அமைப்புகள் உள்ளன. அவையனைத்துமே ஓசையின்றிச் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
தாவரங்கள், உணவு சமைப்பதற்கான ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதற்காக, கரிம வாயுவைப் பயன்படுத்துகின்றன. அவை வளரும்போது, ஆகிசிஜன் வாயுவை உற்பத்தி செய்யும் அதேநேரம், கரிம வாயுவைக் குறிப்பிட்ட அளவில் வெளியிடுகின்றன. இது, மழைக்காடுகள், புல்வெளிகள், பாலைவனத் தாவரங்கள் என்று அனைத்திலுமே நிகழும்.
சராசரியாக நிலம் சார்ந்த சூழலியல் அமைப்புகள், வெளியேற்றும் கரிம வாயுவைவிட உள்ளிழுத்துச் சேகரித்துக்கொள்ளும் கரிம வாயுவின் அளவுதான் அதிகம். புதைபடிம எரிபொருளை எரிப்பதன் மூலம் மனிதர்கள் வெளியேற்றும் கரிமத்தின் மூன்றிலொரு பகுதியை அவை உள்ளிழுத்துச் சேகரித்து வைக்கின்றன. இந்தத் தன்மையே, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இயற்கை வளங்களை முதன்மை ஆயுதமாக நிறுத்துகின்றது. ஆனால், புவி வெப்பமயமாதல் காரணமாக அதிகரிக்கும் வெப்பநிலை, சூழலியல் அமைப்புகள் உள்ளிழுக்கும் கரிமத்திற்கும் வெளியேற்றும் கரிமத்திற்கும் இடையில் சமநிலையின்மையை உண்டாக்கிக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வருந்துகிறார்கள்.
பூமி அதிகமாகச் சூடாகும்போது, ஒளிச்சேர்க்கை செயல்பாடுகள் குறையத் தொடங்குகிறது. ஒளிச்சேர்க்கையின் செயல்பாடுகள் வேகமாகக் குறைவதால், அப்போது தேவைப்படும் கரிம வாயுவை உள்ளிழுக்கும் அளவும் குறைகிறது. அதேநேரம், தாவரங்கள் சுவாசிக்கும்போது வெளியிடும் கரிம வாயு தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இதனால், அவை உள்ளிழுப்பதைவிட அதிகமான கரிமத்தை வெளியேற்றும் சூழல் ஏற்படுகிறது.
சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை (https://advances.sciencemag.org/content/7/3/eaay1052) புவி வெப்பமயமாதலால் நிகழும் மீளெழுச்சி நிலை (Tipping point), இந்தப் பிரச்னையால் சற்று விரைவாகவே வரலாமென்று எச்சரிக்கிறது. இதே வேகத்தில் பசுமை இல்ல வாயு வெளியீடு அதிகரித்தால், பூமியில் கிட்டத்தட்ட பாதியளவு நிலம் சார் சூழலியல் அமைப்புகள், தாக்குப்பிடிக்கக்கூடிய வெப்பநிலையை அடுத்த சில பத்தாண்டுகளில் கடந்துவிடும் என்று அந்த ஆய்வுக்கட்டுரை எச்சரிக்கின்றது.
பல்வேறு உலக நாடுகள், அவர்களுடைய நிலப்பகுதியிலுள்ள உயிர்க்கூளத்தையே (biosphere) பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதற்கு நம்பியுள்ளனர். ஆனால், அந்த உயிர்க்கூளங்களே இந்த அபாயத்தால் எளிதில் பாதிக்கப்படுமென்று இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது. உலகம் முழுக்க அமைக்கப்பட்டுள்ள அறிவியல்பூர்வ உணர்கருவிகளில் இருந்து வளிமண்டலதின் வெப்பநிலை, ஈரப்பதம், கரிம வாயு ஆகியவற்றின் தரவுகளைச் சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றைப் பகுப்பாய்ந்து பார்த்ததில், உள்ளூர் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அங்கிருக்கும் சூழலியல் அமைப்புகளிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களைப் பகுப்பாயவு செய்ததன் மூலம், உலகளாவிய தட்பவெப்பநிலைக்கும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையிலான உறவையும் சூழலியல் அமைப்புகளுக்கும் அவற்றுக்கும் இருக்கும் தொடர்பின் மூலம், அதில் நிகழும் மாற்றங்களையும் கண்டறிந்தனர்.
ஆய்வாளர்களின் எச்சரிக்கை, இதோடு நிற்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளில் தாவரவியல் ஆய்வாளர்கள், ஒரு கருதுகோளையும் முன்வைத்துள்ளனர். அதாவது, காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கும் வெப்பநிலைக்குத் தகவமைத்துக்கொண்டு, பிழைத்திருக்க தாவரங்கள் பழகிக் கொள்ளலாம். அதிக வெப்பநிலையிலும்கூட, ஒளிச்சேர்க்கை மேற்கொள்ளும் அளவுக்கு அவை தகவமைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
இதற்கு முன்னர் இதுபோல் நடந்ததில்லை. ஆனால், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மேற்கொள்வதில் முக்கிய மூலப்பொருளாக கரிம வாயு உள்ளது. வளிமண்டலத்தில் முன்னெப்போதையும் விட வேகமாக அதிகரிக்கும் கரிம வாயு அளவு அதற்கான வாய்ப்பை உண்டாக்கலாம். இருப்பினும், இந்தப் பயன்கள் தாவரங்களுக்குத்தானே ஒழிய, காலநிலை மாற்றத்தில் அது எதிர்மறையான தாக்கங்களையே கொண்டுவரும்.
மேலும், இந்த ஆய்வு, தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை மற்றும் ஆக்சிஜன், கரிம வாயுவைச் சுவாசித்தல் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்தியுள்ளது. வளிமண்டலத்தில் கரிம வாயுவை அதிகரிக்கும் காரணிகளில், காடழிப்பு, காட்டுத்தீ போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமீபத்திய பல ஆய்வுகள், இதுபோன்ற காரணிகள், பல்லாண்டு காலமாக கரிமங்களைக் கிரகித்துச் சேகரித்து, கரிமத் தொட்டிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல நிலப்பகுதிகளைத் தொந்தரவு செய்கின்றன. கரிம வெளியீட்டை அதிகரிப்பதில் மேலதிகப் பங்கு வகிக்கும். வெப்பமண்டலக் காடுகளின் கரிமத் தொட்டியைச் சிதைப்பதில் காடழிப்பு வேலைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவையனைத்துமே பசுமை இல்ல வாயு வெளியீட்டைத் துரிதப்படுத்தி, வெப்பநிலையை அதிகரிக்கும்.
ஜனவரி 6-ம் தேதி வெளியான ஓர் ஆய்வு (https://www.eenews.net/climatewire/stories/1063721855?t=https%3A%2F%2Fwww.eenews.net%2Fstories%2F1063721855), விவசாயத்திற்காக அதிகமான புல்வெளிகளை அழிப்பது, உலகளவில் புல்வெளிகள் உள்ளிழுக்கும் கரிமத்தைவிட அதிகமான கரிமத்தை வெளியேற்றும் நிலைக்குத் தள்ளுகின்றன என்று நிரூபித்துள்ளது.
தற்போது, உலகளவிலான சூழலியல் அமைப்புகளில், 10 சதவிகித பகுதிகள் மட்டுமே மீளெழுச்சி நிலையை அடைந்துள்ளன. பாரிஸ் உடன்படிக்கையில் போடப்பட்டுள்ள காலநிலை இலக்குகளை அடைவதில் உலக நாடுகள் கவனம் செலுத்தினால், அதிகரிக்கும் புவி வெப்பநிலையை 2 டிகிரிக்கும் குறைவாகவே வைக்கமுடியும். அது சாத்தியமானால், சூழலியல் அமைப்புகள் பாதுகாக்கப்படும்.
அத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் எளிதில் பாதிக்கக்கூடிய உணர்திறன் மிக்கவையாக இருப்பதால், மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். ஏனெனில், “அந்தச் சூழலியல் அமைப்புகள் கரிமத் தன்மயமாக்கலைச் செய்து வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பதை மட்டுமே செய்வதில்லை. அவைதாம் இந்தப் பூமி உயிர்ப்புடன் சுவாசித்துக் கொண்டிருப்பதற்கான மூல காரணம். அதைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் செயல்படவேண்டும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் காத்தரீன் டஃபி குறிப்பிட்டுள்ளார்.
மதுமதி