“கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதம். உயிரியல் ஆயுதங்கள் குறித்த ஆய்வுத் திட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த வைரஸ். இது இப்போது வெளியே பரவி, மக்களைக் கொலை செய்துகொண்டிருக்கிறது” என்று இஸ்ரேலிய உயிரியல் ஆயுத நிபுணர் டேனி ஷோஹான் வாஷிங்டன் டைம்ஸ் இதழுக்கு கடந்த ஆண்டு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதுவே, இந்த வைரஸ் தாக்குதல் ஓர் உயிரி-போராகவும் இதுவோர் உயிரி-ஆயுதமாகவும் இருக்கலாம் என்ற சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.
இயற்கையாக இது விலங்குகள் மத்தியில் உருவாகிப் பரவியிருக்கலாம் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துவிட்ட நிலையிலும்கூட, இந்த வதந்தி உலகம் முழுக்கச் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. உயிரிப் போர்முறை (Bio war, உயிரி-ஆயுதம் (Bio-weapon), உயிரி-தீவிரவாதம் (Bio-Terrorism) போன்றவை குறித்து மக்கள் மத்தியிலிருக்கும் அச்சம்தான் அதற்குக் காரணம்.
2003-ம் ஆண்டில் சார்ஸ் (SARS)என்ற வைரஸ் பரவியபோதும்கூட, இதேபோல அதுவும் ஓர் உயிரி-போர்தான் என்ற வதந்தி பரப்பப்பட்டது. பின்னர்தான், அதுவொரு விலங்கு-வழி நோய் என்று நிரூபனமானது. இப்படி, ஒவ்வொரு முறை புதிய வைரஸ் நோய் பரவும்போதும் மக்களுக்குப் உயிரி-போர் குறித்த அச்சம் ஏற்படுவதும் ஏன்?
அதற்கான பதில் மிகவும் எளிமையானது. வரலாறு நெடுக, மனித இனம் இத்தகைய உயிரி-ஆயுதங்கள், நோய்த் தாக்குதல்கள் மூலம் கோடிக்கணக்கான உயிர்களை இழந்துள்ளது. போர்க் காலங்களின்போது எதிரி நாட்டின்மீது இத்தகைய நோய்களைப் பரப்பிவிடும் பழக்கம் பல்லாண்டு காலமாகவே இருந்து வந்துள்ளது. அதுவே, இத்தகைய பயங்களை விரைவாகப் பதிய வைத்துவிடுகின்றன.
அத்தகைய உயிரி-ஆயுதங்கள் எப்போது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன?
ஆதிகால மனிதர்கள் தங்கள் ஈட்டிகளின் கூர்முனைகளில் நஞ்சைத் தடவி வைத்திருப்பர். லேசாகக் கீறினாலே உடல் முழுக்க நஞ்சு பரவி, மோசமான மரணத்தைத் தழுவும் விதத்தில் அதன் வீரியம் இருக்கும். இவை குறித்த பதிவுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கின்றன. அதுவும் ஒரு வகையான உயிரி-ஆயுதம்தான். எதிரியை நேரடியாகச் சந்தித்து வீழ்த்தத் துணிவின்றி, இப்படி நஞ்சு தடவிச் சாதித்துக் கொண்டனர். அதேபோல், கி.மு.2500 காலகட்டத்தின் மெசபடோமிய நாகரித்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அஸிரியர்கள், போர்களில் வெற்றியடைய நோய்க் கிருமிகளை எதிரிப் படைக்குள் பரப்பவிடுவார்கள். அவர்களது கிணறுகளில் நச்சு வேதிமங்கள் கலந்த பூஞ்சைகளைக் கலந்தார்கள். அது எதிரிகளைச் செயலிழக்கச் செய்து, அவர்கள் வெற்றியடைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியது. இதன்மூலம் அஸிரியர்கள் கிட்டத்தட்ட எதிரிகள்மீது நேரடித் தாக்குதல் நடத்துவதற்கு முன்னமே வென்றுவிட்டனர் என்று சொல்லலாம்.
இருப்பினும், பழங்கால உயிரி-போர்களைவிட, அஸிரியர்களைவிட, நவீனகால உயிரி-போர் முறைகள் மிகவும் கொடூரமானவை. அவை, நியாயமற்ற, இரக்கமற்ற, அழிவை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட போர் ஆயுதமாக மாறி நிற்கின்றன. வியட்நாம் போரின்போது, ஏஜென்ட் ஆரஞ்சு என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய உயிரி-போரும் அதில் பயன்படுத்தப்பட்ட டைக்ளோரோ ஃபினாக்ஸி அமிலம் மற்றும் டிரைக்ளோரோ டினாக்ஸி அமிலம் போன்ற உயிரியல் ஆயுதங்களும் வியட்நாமின் சந்ததிகளை இன்றுவரை பாதித்துக் கொண்டிருக்கிறது. நேட்டோ கணக்கின்படி, இதுவரை பேக்டீரியா, வைரஸ், நச்சுத்தன்மை மிகுந்த வேதிமங்கள், ஆந்த்ராக்ஸ், ப்ளேக், இபோலா என்று பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 39 உயிரி-ஆயுதங்கள் இருக்கின்றன.
ஆந்த்ராக்ஸ் வைரஸ், 1970-களில் சோவியத் ராணுவப் பரிசோதனைக் கூடங்களிலிருந்து ஒரு விபத்தின் மூலமாக வெளியே பரவியது. ஆந்த்ராக்ஸ், போடுலினம் என்ற நச்சு வேதிமம், அஃப்லடாக்சின் போன்ற உயிரி-ஆயுதங்களை ஈராக் பெரியளவில் தயாரித்து, அதை ஏவுகணைகள் மூலமாக எதிரி நாடுகளுக்குள் பரப்பும் அளவுக்குப் போர் வியூகங்களை வகுத்து வைத்திருந்தன. அதேபோல், ஜப்பானும் போடுலினத்தை மஞ்சூரியன் போரில் பயன்படுத்தியது. அதை, போர்க் கைதிகள் மீதும் அவர்கள் வலியச் செலுத்தித் துன்புறுத்தினார்கள்.
1972-ம் ஆண்டு போடப்பட்ட உயிரி-ஆயுதங்களுக்கான உடன்படிக்கையை ஈராக் பல முறை மீறியது. ஆபத்தான அஃப்லடாக்சினைத் தயாரித்து, ஆயுதங்களின் மூலமாகப் பரப்பியதுதான் அதில் மிகப்பெரிய விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது. வளைகுடாப் போர் முடிந்தவுடன், ஐ.நா சபையின் சிறப்புக் குழு ஈராக்கிடமிருந்த அஃப்லடாக்சின் ஆயுதங்கள் மொத்தத்தையும் அழித்தது.
1972-ம் ஆண்டின் உடன்படிக்கை, உயிரி-ஆயுதங்களைத் தயாரிக்கும் திட்டங்களை முற்றிலுமாக முடக்கவில்லை. ஆனால், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தின. இந்த வரையறைகள் ஓரளவுக்கு அரசுகளைக் கட்டுப்படுத்தினாலும், தீவிரவாதக் குழுக்களின் கைகளில் சிக்கும் உயிரி-ஆயுதங்கள் சமீபகாலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இப்படி, காலம் காலமாக உயிரியல் ஆயுதங்களின் பயன்பாடு இருந்துகொண்டே இருப்பதும் அதனால் ஏற்படும் அழிவுகளும்தான் அவை குறித்து ஓர் அச்சத்தை மக்களிடையே விதைத்துள்ளன. அந்த அச்சமே, இப்போது ‘கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதம்’ என்ற வதந்திக்குத் தீனி போட்டுள்ளது. இது மரபணு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ்தான் என்று சமூக வலைதளங்களும் வாஷிங்டன் டைம்ஸ் போன்ற சில சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
அதேநேரம் இந்தக் கூற்றை வழிமொழியும் மற்ற சிலர், “இந்த வைரஸ் பெருகுவதற்கு உதவும் இதனுள் இருக்கும் ஒரு என்சைம், எச்.ஐ.வி வைரஸ் வளர்வதற்கு உதவும் என்சைம் போலவே இருக்கிறது. எச்.ஐ.வி-யில் சில வேறுபாடுகளைச் செய்து இதைப் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்” என்று கூறுகின்றனர். ஆனால், இரண்டையும் பரிசோதித்துப் பார்த்த வைராலஜி நிபுணர்கள் யாருமே இதுவரைக்கும் இந்தக் கூற்றுக்கு உரிய ஆதாரத்தைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களுடைய ஆய்வுமுடிவுகள் வைரஸ்களில் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சி மூலமும் மரபணு மாற்றங்களின் மூலமும் இயற்கையாக உருவானதுதான் என்று கூறுகின்றன.
ஒரு நோய் பெரிய அழிவை உண்டாக்கினால், அதுகுறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் பரவுவது வழக்கமாகவே நடக்கும். கொரோனா வைரஸ் உயிரி-ஆயுதம்தான் என்ற கூற்றுக்கு இதுவரைக்கும் ஆதாரம் என்று சொல்ல ஒன்று கூடக் கிடைக்கவில்லை. அதன், தோற்றத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், அது வௌவால்களில் தோன்றியிருக்க அதிக வாய்ப்புண்டு என்று இதுவரையிலான ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அவற்றிலிருந்து மனிதர்களுக்கு எப்படிப் பரவியது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்தால் மட்டுமே, இந்தக் குழப்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
மதுமதி