பூமி எப்போது, எப்படி உருவானது என்ற கேள்வி நம் அனைவருக்குள்ளும் இருக்கும். கடந்த சில நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகள், நம்பகத்தன்மை வாய்ந்த, நடைமுறைச் சாத்தியமான பதில்களை நமக்குக் கொடுத்திருக்கின்றன.
ஆனால், ஆரம்பக்காலத்தில் பூமியின் தோற்றம் குறித்த கேள்வியை மக்கள் எப்படி அணுகினார்கள் தெரியுமா?
17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேம்ஸ் அஷர் என்ற ஐரிஷ் பேராயர் ஒருவர், “கி.மு.4004, அக்டோபர் 23-ம் தேதி, இலையுதிர் காலத்தின் ஒரு நாளன்று நள்ளிரவில் உலகம் தோன்றியது” என்று கூறினார். அவருடைய இந்தக் காலக் கணிப்பு Ussher Chronology என்று குறிப்பிடப்படுகின்றது. அந்தக் காலகட்டத்தில், பூமியும் இதில் வாழ்கின்ற உயிரினங்களும் எப்போது உருவாகின என்ற தேடல் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் அதில் மக்களிடையே கொண்டுவரப்பட்டவை என்னவோ பெரும்பாலும் ஆன்மிக அடிப்படையிலான பதில்கள் மட்டுமே. அஷரை போலவே, 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோசஃப் ஜஸ்டஸ் ஸ்காலிகர் கி.மு.3985-ல் பூமி உருவானது என்றார். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் லைட்ஃபூட் கி.மு.3928-ல் உருவானது என்று கூறினார். இவை பைபிளை அடிப்படையாக வைத்து, பூமியின் தோற்றத்தைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள்.
ஆனால், காலப்போக்கில் நடத்தப்பட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகள் பூமி ஒன்றும் அப்படி திடீரென்று ஒருநாளில் உருவாகிவிடவில்லை என்பதையும் அது மிக நீளமான செயல்முறையின் வழியாக உருவாகியது என்பதையும் கண்டறிந்தனர்.
சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், நெபுலா என்றழைக்கப்படும் ஒரு மிகப்பெரிய வாயுக்கள் நிறைந்த பெருநட்சத்திரம் வெடித்துச் சிதறியது. அந்தப் பெருவெடிப்பிலிருந்து சிதறிய துகள்களே, சூரியன் மற்றும் அதைச் சுற்றிச் சுழலும் பூமி உட்பட அனைத்துக் கோள்களும். காலப்போக்கில் நடந்த பல்வேறு கட்டச் செயல்முறைகள், அவற்றை இப்போதைய சூரிய மண்டலமாக மாற்றின.
பேரண்டத்துடைய (Universe) வயதில், மூன்றில் ஒரு பங்கு வயதுதான் பூமிக்கு. 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் பூமி உருவானபோது, உயிர்கள் என்று எதுவும் இருக்கவில்லை. அப்போது அது முழுவதும் உருகிய திரவமாகவே இருந்தது. காலப்போக்கில் வெப்பச்சலனத்தால் (உதாரணத்திற்கு சூடாக சமைத்து வைத்த போண்டாவிலிருந்து வெப்பம் வெளியேறுவது போல) பூமி குளிர்ச்சியடைந்து ஆரம்பத்திலிருந்த காற்று மண்டலம் உருவானது.
ஆனால், அப்போதிருந்த காற்று மண்டலம் உயிர்கள் வாழத் தகுந்தவையாக இருக்கவில்லை. விரைவில் நடந்த வேதிம வினைகளினால் கடல் உருவானது. பூமி உருவாகிய அடுத்த 700 லட்சம் ஆண்டுகளில் நிலவு என்ற இயற்கைக் கோள் அதனருகே உருவாகி பூமியின் ஈர்ப்பு விசையால் இன்றளவும் இருக்கின்றது. நிலவின் தோன்றலுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, தியா (Thea) என்ற கிரகம் (இன்றைய செவ்வாய்) பூமி மீது மோதிய செயல்முறைதான். தியா கிரகம் பூமி மீது மோதிய தாக்கத்தால் பிரிந்து சென்ற பூமியின் ஒரு பகுதி, காலப்போக்கில் அதற்குள் ஏற்பட்ட செயற்பாடுகளால் நிலாவாக உருப்பெற்றது என்று கூறப்படுகிறது.
பூமியில், 320 கோடி ஆண்டுகளுக்கு முன்னிருந்து 240 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையிலான காலத்தில் தான் ஒளிச்சேர்க்கை செய்யும் உயிர்கள் தோன்றின. அதற்குப் பின்தான் உயிரினங்களில் பன்மைத்துவம் விரைவாக நடந்தது. அதாவது பலவகை உயிரினங்கள் பலவிதமாகத் தோன்றத் தொடங்கின. அப்படித் தோன்றிய பல்வேறு வகை உயிரினங்களில், 50 கோடி உயிரினங்கள் அதாவது 99% முற்றிலுமாக அழிந்துவிட்டன.
புத்துயிர் ஊழியின் தொடக்கத்தில் வருகின்ற மியோசீன் (Meocene) காலத்தின் பிற்பகுதியில், ஹொமினின் (Hominin) என்ற மனித இனத்தின் மூதாதை இனமான மனிதன் போன்ற இனம் உருவானது. தற்போது இருக்கும் மானிடக் கிளையின் நேரடி முன்னோர் இவர்களே. 130 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரையிலுள்ள காலத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மனித வரலாற்றின் பெரும் பகுதி வரை, உயிர்களைக் கடவுள் படைத்தார் என்ற கருத்தே வியாபித்திருந்தது. வேறு எந்தவொரு விளக்கமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே அப்போது தெரியவில்லை. ஆனால், நவீன யுகத்தின் பல்வேறு கட்ட ஆய்வுகள், அது உண்மையில்லை என்பதையும் உயிர்களின் தோற்றத்திற்குரிய நடைமுறைச் சாத்தியமான காரணிகளையும் விளக்கின. கடந்த நூற்றாண்டில் அலெல்சாண்டர் ஒபாரின் என்ற சோவியத் விஞ்ஞானி போன்ற அறிவியலாளர்கள், எப்படி முதல் உயிர் உருவானது என்பதைப் புரிந்துகொள்ள பல மாதிரி ஆய்வுகளைச் செய்தார்கள். அந்த ஆதிக் காலத்தில் இருந்த புவி அமைப்பினுடைய மாதிரியை ஆய்வுக்கூடங்களில் உருவாக்கி கூர்ந்து கவனிக்கவும் செய்தார்கள். அத்தகைய ஆராய்ச்சிகளின் வழியே கிடைத்த பதில்கள், உயிர்களின் தொடக்கம் குறித்த கேள்விக்கான பதிலை நோக்கிய பாதையில் ஒரு புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
உயிர் மிகவும் தொன்மையானது. மிகவும் பழைமையான, பிரபலமான உயிரினமாக இன்றளவும் பொதுமக்கள் மத்தியில் திகழ்பவை, 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த டைனோசர்கள். ஆனால், ‘உயிர்’ என்பது அதைவிட மிகவும் பழைமையானது.
மிகப் பழைமையான உயிரினத்தின் தொல்லெச்சம் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த stromatolites என்ற ஓர் உயிரினத்தினுடையது. இதன் வயது, டைனோசர்களைவிட 14 மடங்கு அதிகம். முன்னர் இதுவே புவியின் பழைமையான உயிரினம் என்று கூறப்பட்டது.
இருப்பினும், பூமியில் உயிர்கள் அதற்கும் முந்தைய காலத்தில்கூட வாழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என்று தோன்றவே, மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவும் பட்டன. உதாரணத்திற்கு, 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், 370 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ட்யூப் வடிவத்திலிருக்கும் ஒரு வகை பேக்டீரிய நுண்ணுயிரியின் தொல்லெச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இதையும் கூட பழைமையான உயிரினம் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் இது பழைமையானது என்று கூறலாம்.
இதுவரை கிடைத்துள்ள தொல்லெச்ச ஆதாரங்களின் அடிப்படையில் பூமியில் முதல் உயிர் எப்போது தோன்றியது என்பதை ஒரு கால அட்டவணையின் மூலம் கணக்கிட்டனர். அந்தக் கால அட்டவணையின்படி, பூமியில் முதன்முதலாக உருவானது நுண்ணுயிரிகளே என்று கூறப்படுகின்றன. மேலும், அனைத்து உயிர்களுக்குமான மூலம் அணுக்களே என்பதும் மேற்கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
அணுக்கள் முதலில் 17-ம் நூற்றாண்டில் முதல் நவீன நுண்ணோக்கி (microscope) வடிவமைக்கப்பட்ட பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவையே அனைத்து உயிரினங்களுக்குமான அடிப்படையாக இருப்பதை மனித இனம் புரிந்துகொள்ள மேலும் நூறு ஆண்டுகள் ஆனது. பின்னர், அடுத்தடுத்த ஆராய்ச்சிகளின் வழியே 19-ம் நூற்றாண்டின் உயிரியல் ஆய்வாளர்கள், அனைத்து உயிரினங்களும் அணுக்களால் ஆனவை என்பதைத் தெரிந்துகொண்டனர்.
உருவ அமைப்பில் ஒரு டைனோசரைப் போலவோ அல்லது ஒரு மீனைப் போலவோ நீங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நுண்ணோக்கியில் கூர்ந்து கவனித்தால், நாம் உட்பட, தாவரங்கள், பூஞ்சைகள் உட்பட அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை என்று தெரிந்துகொள்ளலாம்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இங்குள்ள சிறு எறும்பு முதல் பேருயிரான யானை வரை, நீங்கள் உட்பட அனைவருடைய மூதாதையும் நுண்ணுயிரிதான்.
– சின்ன கண்ணன்