Home தமிழ்நாடு கொரோனா யுத்தம்… முன்னிலையில் நிற்கும் பெண்கள் அங்கீகரிக்கப் படுகிறார்களா?

கொரோனா யுத்தம்… முன்னிலையில் நிற்கும் பெண்கள் அங்கீகரிக்கப் படுகிறார்களா?

0
கொரோனா யுத்தம்… முன்னிலையில் நிற்கும் பெண்கள் அங்கீகரிக்கப் படுகிறார்களா?

1964-ம் ஆண்டு, தன்னுடைய எலக்ட்ரான் நுண்ணோக்கியில் உருண்டையான, உடலைச் சுற்றி குச்சி குச்சியாக நீட்டிக்கொண்டிருந்த ஒரு சாம்பல் நிறமுடைய புள்ளியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜூன் அல்மெய்டா. மனிதர்கள் மத்தியில் கொரோனா வைரஸை அறிமுகப்படுத்திய பெருமையைப் பெற்றவர். வைராலஜி துறையில் இத்தனை நாள்களாகக் கண்டுகொள்ளப்படாமலிருந்த அவர், தனது 34 வயதில் செய்த இந்தக் கண்டுபிடிப்பிற்குத் தற்போது அங்கீகாரம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அல்மெய்டா கொரோனா வைரஸைக் கண்டுபிடித்தபோது, அது 56 ஆண்டுகள் கழித்து மொத்த மனித இனத்தையுமே குலை நடுங்க வைக்குமென்று கனவிலும்கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஆனால், இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஆதியில் இப்படியொரு வைரஸ் இருப்பதை அல்மெய்டா கண்டுபிடித்ததைப் போலவே, தற்போது அதனால் விளைந்துகொண்டிருக்கும் பேராபத்திலும் பெண்களின் சேவை மகத்தானதாக இருந்துவருகிறது.

 Women and Covid war
Women and Covid war

56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்தப் பங்களிப்பு இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்றும்கூட, கொரோனாவுக்கு எதிராக மனித இனம் செய்துகொண்டிருக்கும் சண்டையில் முன்வரிசையில் நின்று தன் உயிரையே பனயம் வைத்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மனிதநேயமிக்க உயிர்களில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. உதாரணத்திற்கு, சீனாவில் 99 சதவிகித செவிலியர்கள் பெண்களே, 48.9 சதவிகித மருத்துவர்கள் பெண்களே. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இந்தியாவில் மருத்துவத் துறையில் 27.7 சதவிதம் பெண்கள் பணிபுரிகின்றனர். உலகளவில் மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்பான பணிகளில் சுமார் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் பணிபுரிகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா போன்ற சுகாதார அவசரநிலைகளைச் சமாளிக்க உலகின் மிகத் திறமையான அறிவாளிகள் தேவைப்படுகிறார்கள். பல்வேறு குழுக்கள், ஆங்காங்கே புதுப்புது ஆய்வுகளையும் அதிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் செய்துகொண்டேயிருக்கிறார்கள். தடுப்பு மருந்து கண்டுபிடித்ததிலிருந்து சமூகப் பாதுகாப்பு வரை பல்வேறுகட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்தத் துறைகள் அனைத்திலுமே பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்து வருகிறது.

Women and Covid war 3
Women and Covid war 3

இதுவரையிலான ஆய்வுகள், கொரோனாவின் தாக்கத்தால் மரணிப்பவர்களின் விகிதத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவு என்றே கூறுகின்றன. இருப்பினும், நேரடிப் பாதிப்பையும் தாண்டி பெண்கள் நூற்றுக்கணக்கான வழிகளில் இதனால் பாதிக்கின்றனர். நீட்டிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஊரடங்கினால், பெண்கள் சந்திக்கும் இன்னல்களையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதற்கு, பெண் தலைமை இருந்தால் மட்டுமே சாத்தியம்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய ஐரோப்பாவின் ஆகப்பெரிய நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் அதில் பலியாவோரின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. அதோடு ஐரோப்பிய நாடுகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஜெர்மனியில்தான் அதிகம்.  அந்நாட்டின் தலைவர் ஏஞ்சலா மார்கெல் இந்தப் பேரிடரை மிகவும் திறமையாகக் கையாண்டு கொண்டிருக்கிறார்.  இருபாலர்களின் சிரமங்களையும் உணர்ந்து, இருதரப்புக்கும் சரிசமமான முடிவுகளை எடுப்பதே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்று உலக நாடுகள் மத்தியில் அவருக்குப் பாராட்டுகளும் எழுகிறது. 2020-ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 27-ம் தேதி அங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ஜெர்மன் மக்களில் 89 சதவிகிதம் பேர் ஏஞ்சலா மார்கெல் மிகத் திறமையாகச் செயல்படுவதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Women and Covid war 2
Women and Covid war 2

ஐரோப்பிய நாடுகளிலேயே முதலில், பள்ளிகளை மூடி, சமூகக் கூடுதல்களைத் தடை செய்து, இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த முதல் நாடு டென்மார்க். மார்ச் 14-ம் தேதி டென்மார்க் தன் எல்லைகளை அடைத்தது. மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் அனைத்துக் கடைகளையும் வணிக வளாகங்களையும் இழுத்து மூடுமாறும் வலியுறுத்தியது. அதன்விளைவாக, அவர்கள் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, முதல் அலையின்போது தம் மக்களுக்குத் தங்கள் இயல்பு வாழ்வையும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் சிறிது சிறிதாகத் திருப்பிக் கொடுக்கும் நிலைக்கே கொண்டு வந்தார் டென்மார்க் பிரதமர் மெட் ஃப்ரெட்ரிக்சென்.

நியூசிலாந்தில் மார்ச் 19-ம் தேதி இந்த லாக்டவுன் தொடங்கியது. அடுத்த நான்கு வாரங்களுக்கு இது நீளும் என்று முன்னமே அறிவித்த அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன், மக்கள் அதற்குத் தயாராக 48 மணிநேரம் கால அவகாசமும் கொடுத்தார். 2020-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி அங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு, நியூசிலாந்து மக்களில் 88 சதவிகிதம் பேர் அவர் எடுக்கும் முடிவுகளை நம்புவதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 Women and Covid war 1
Women and Covid war 1

கடந்த ஆண்டு , கொரோனா பரவல் தொடங்கியபோதே உலக வங்கியும் உலக சுகாதார நிறுவனமும் இந்தப் பேரிடருக்கு எதிரான செயல்பாடுகளைத் தலைமை தாங்குவதற்கு நிறைய பெண்கள் முன்வர வேண்டுமென்று அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பைத் தாண்டி முன்னணியில் நிற்பவர் பட்டியலில் பெண்களை முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மருத்துவத் துறையில் உலகளவில் 70 சதவிகிதம் பெண்களே பங்கு வகிக்கிறார்கள். ஆனால், மூத்த தலைமைப் பதவிகளில் அவர்களின் பங்கு வெறும் 25 சதவிகிதம்தான். 2020-ம் ஆண்டின் Global Health 50/50 report என்ற அறிக்கை, இன்றளவும் மருத்துவத் துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்கள் கையிலேயே இருப்பதாகக் கூறுகின்றது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுகூடியிருக்கும் செவிலியர்களில் 89 சதவிகிதம் பேர் பெண்கள். அதுவே, மருத்துவர்களில் 27.7 சதவிகிதம் பேர். இந்தியாவின் சுகாதாரத் துறையில் 38 சதவிகிதம் பெண்களின் பங்கு உள்ளது. உலகளவில் 70 சதவிகிதம் பெண்களின் பங்கு சுகாதாரத் துறையில் உள்ளது.

 Women and Covid war 5
Women and Covid war 5

பெண்மைக்குத் தெரியாத, பெண்மை எதிர்கொள்ளாத வலி புவியில் இல்லவே இல்லை. அந்த வலிகளை எதிர்கொண்டு வென்று நிற்கும் பெண்களைவிடத் தெளிவாக ஒருவரின் வலிகளை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ள முடியாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடல் மற்றும் மன வலிகளை உணர்ந்து, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் செவிலியர்களில் உலகளவில் 91 சதவிகிதம் பெண்களே என்பதை நினைத்துப் பெருமைகொள்வோம்.

மதுமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here