நீண்ட பிளவுபட்ட வால், கரியநிறம் , ஒடுங்கிய உடல் மற்றும் மைனாவை விட சற்று பருமன் குறைந்த உடலோடு இருக்கும் கரிக்குருவிகளை வேலிகளில், வயல்வெளிகளில், மின்கம்பங்கள் மீது மற்றும் சில நேரங்களில் ஆடு, மாடுகளின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கரிக்குருவி, கரிச்சான் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் பறவையின் முக்கிய உணவு பூச்சிகளே.
நீண்ட வாலும் நுனியில் உள்ள பிளவும் இந்தப் பறவைக்கு வேட்டையாட மிகவும் உறுதுணையாக இருக்கி்ன்றன. இவ்வாறு பிளவுபட்ட வாலையுடைய எந்தப் பறவையும் லாகவமாகத் திரும்பவும், உடனடியாகக் குட்டிக்கரணம் அடிக்கவும் அதனுடைய வால் பயன்படுகின்றன. மேலும் கால்நடைகளின் மீது அமர்ந்து செல்லும்போது அதன் குளம்படிகளிலிருந்து பறந்து செல்லும் தத்துக்கிளிகளையும் பூச்சிகளையும் பிடித்து உண்கின்றன.
கோடையின் முடிவில் வால் நீண்ட கரிக்குருவிகள் ஓங்கி வளர்ந்த மரத்தின் கிளைகளில் படர்ந்துள்ள கவட்டைகளில் புள், சிறு குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு கிண்ணம் போன்ற கூடமைத்து அதில் 3 லிருந்து 5 முட்டைகள் வரை இடுகின்றன. முட்டைகள் வெள்ளையாகவும் செந்தவிட்டு நிறப் புள்ளிகளுடனும் காணப்படும். இது கூடமைத்திருக்கும் இடத்திற்கு அருகில் பருந்து, காக்கை மற்றும் வேட்டையாடிகள் எதுவும் வராமல் பார்த்துக்கொள்ளும். அப்படி ஏதாவது பறவைகள் வந்துவிட்டாலும் மிக வேகமாக அவற்றைத் துரத்தியடித்துவிடும்.
சாதுவான பறவைகள் சில தனது கூட்டிற்கும் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பு கருதி கரிச்சான் கூடமைக்கும் அதே மரங்களின் கீழ்ப பகுதியில் கூடு கட்டுகின்றன. இதனால் வேட்டையாடிப் பறவைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, இந்தப் பறவைகள் கரிச்சானின் கூடு இருக்கும் இடத்தையே தேர்வு செய்கின்றன. மணிப்புறாவும் மாம்பழக்குருவியும் கரிச்சான் குருவிகளின் கூடுகளுக்குக் கீழேயே கூடமைக்கின்றன.
ஒரு நாளுக்கு தனது உணவாக 200 கிராம் பூச்சிகளை உண்ணும் கரிச்சான்கள் விவசாயத்திற்குப் பெருமளவு நன்மை பயக்கின்றன. மேலும் ஐந்து கரிச்சான்கள் சேர்ந்தால் விவசாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு கிலோ பூச்சிகளை உட்கொண்டுவிடும். இதனால் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படாமல் மண்வளமும் சூழலும் காக்கப்படுகின்றன.
கரிச்சான் என்ற கருவாட்டுவாலன்கள் நமக்கான புறச்சூழல் பாதுகாவலர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது.