வெள்ளை நிறத்தில் மஞ்சள் அலகுடன் அளவில் சிறியதாக காணப்படும் மாட்டுக்கொக்குகள் (Cattle Egret), வயல் வெளிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் சிறு் கூட்டமாக காணப்படும். இதை உண்ணிக் கொக்கு என்றும் அழைப்பார்கள்.
மாடு, எருமை, ஆடுகள் மேயும் இடங்களில் அதன் காலடியை ஒட்டியே நடந்து கொண்டிருக்கும். கால்நடைகள் நடக்கும்போது அதன் காலடியிலிருந்து துள்ளிக் குதிக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். கால்நடைகள் தங்கும் இடங்களிலும் அவற்றின் அருகாமையிலும் நின்றுகொண்டு அவற்றின் மீது ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சும் உண்ணிகள் மற்றும் ஈக்களைப் பிடித்து உண்ணும். இதனால் இந்தப் பறவை மாட்டுக்கொக்கு என்றும் உண்ணிக்கொக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் அடையாளத்தை எளிதில் நினைவு வைத்துக்கொள்ளலாம். அளவில் சிறிதாக இருக்கும். உயரம் 48-53 சென்டிமீட்டர் இருக்கும். பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களில் காணப்படும். கால்நடைகளுடன் இரைதேடும். இதன் அலகு மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதன் இனப்பெருக்க காலத்தில் இதன் மேற்புறம் தங்க செம்பட்டை நிறமாக காட்சியளிக்கும்.
அதிகாலை நேரத்தில் இரைதேடவும் அந்திசாயும் பொழுதில் கூடுகளை அடையவும் கூட்டம் கூட்டமாகச் செல்வதே மிக அழகாக இருக்கும். கூட்டமாக குளக்கரையில் உள்ள மரங்களிலும் நெரிசல் மிகுந்த நகரங்களில் உள்ள பெருமரங்களிலும் கூடமைக்கும்.
கால்நடைகளுக்கு நன்மை பயக்கும் உண்ணிக் கொக்குகளை மாட்டின் மருத்துவர் என்றும் கூறலாம். வயல்வெளிகளிலும் மேய்ச்சல் நிலங்களிலும் அதிகமாகக் காணப்படும் இப்பறகைள் உள்நாட்டுப் பறவையே ஆகும்.