பூரானின் அறிவியல் பெயர் சில்லோபோடா. அதாவது ஒவ்வொரு கண்டத்திலும் கால்களைக் கொண்டது என்பது பொருள்.
நூறுகாலிகள் என்பதையே அறிவியலில் Centipede என்று கூறுவர். ஆனால் பூரானுக்கு நூறு கால்கள் கிடையாது.
பூரான்கள் உலகின் வெப்பமண்டலப் பகுதிகள் முழுதும் காணப்படுகின்றன. பூரானில் சுமார் 3000 சிறப்பினங்கள் உள்ளன.
பூரானின் முன்பகுதி கால்கள் ஒரு சோடி கொடுக்கு போன்ற அமைப்புடன் இருக்கிறது. இதை இரையை கவ்விப் பிடிக்க பூரான்கள் பயன்படுத்துகின்றன. இந்தக் கொடுக்குகள் கால்களிலிருந்து உருமாற்றம் பெற்றவை தான்.
முழு ஊனுண்ணிகளான பூரான்கள் இரவாடிகள் ஆகும். இவை புழு, பூச்சிகள், சிலந்திகள், சிறு பாம்புகள், பல்லிகள், தவளை குட்டிகள், எலி மற்றும் சிறு பறவைகளின் குஞ்சுகள், கரப்பான் பூச்சிகள் ஆகியவற்றை இரையாக்கிக் கொள்கின்றன. மனிதனுக்குத் தீங்கு செய்யாமல் இவை இரவில் அமைதியாக ஊர்ந்து திரிந்து இரை தேடுகின்றன.
பகல் நேரங்களில் ஈரப்பதமான இடங்களில் உள்ள மரம், குப்பை மற்றும் கற்களின் அடியில் பதுங்கிக் கொள்கின்றன. இரவில் இரை தேட மீண்டும் வெளியில் வருகின்றன.
பூரான்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை. பெண் பூரான்கள் கோடைக்காலத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கும் மேல் முட்டையிட்டு அதை மண்ணில் புதைத்து வைக்கின்றன. முட்டைகள் பொரிந்தவுடன் பூரான் குஞ்சுகள் தாமாகவே வெளியில் வந்து இரைதேட ஆரம்பித்து விடுகின்றன.
பூரானுக்கு மனிதனை கொல்லும் அளவிற்கு விஷம் கிடையாது. பூரான் கடி மனிதனுக்கு எவ்வித தீங்கும் செய்யாது. இவற்றுக்கு இருக்கும் விஷமானது இதன் இரைகளான சிறு பூச்சிகளை மயக்கமடையச் செய்வதற்கே பயன்படுகின்றன.
பூரான்களில் அதிக ஆபத்துள்ளவை காட்டுப் பூரான்களே. இவை மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நமது வீட்டுப் பூரானை விட உருவில் பெரியதாகக் காணப்படும். இவை கடித்தால் மட்டுமே கடு்ம் வலியை ஏற்படுத்தும்.
காட்டுப் பூரான்கள் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும். நம் பகுதியில் இருப்பவை அனைத்துமே சிறிய வகை பூரான்கள் தான்.
மனிதனின் புறச் சூழலை பூச்சிகளிடமிருந்து காப்பாற்றும் பூரான்களைக் கண்டவுடன் அடித்துவிடாமல் அதை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் கொண்டுவிடலாமே.
பூரானைக் கொல்வதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில், உங்கள் வீட்டைச் சுற்றி பூரான்கள் இருந்தால், பூச்சித்தொல்லையிலிருந்து நீங்கள் விடுபட முடியும்.