வழுவாங்கி என்றழைக்கப்படும் பாம்புதாரா (Darter) நீர்நிலைகளில் மட்டுமே வாழும் பறவையாகும். இதன் கழுத்துப்பகுதி பாம்பு போல் நீண்டு காணப்படும். தலை சிறியதாயினும் அலகு நீண்டு கூர்மையாக இருக்கும். இந்தப் பறவைகள் தனது உடல் முழுவதையும் நீருக்குள் மூழ்க வைத்துக்கொண்டு கழுத்தையும் தலையையும் மட்டும் நீரின் மேற்புறத்தில் தெரியும்படியே நீந்திக் கொண்டிருக்கும். பார்ப்பதற்கு பாம்பு போலவே காணப்படும்.
பாம்புதாராவின் முக்கிய உணவு மீன் மட்டுமே. இவை நீருக்கடியில் தனது சிறகை சிறிது விரித்தபடியே மீன்களைத் துரத்திச்செல்லும். இதன் கழுத்தில் உள்ள முன்னெலும்பு அமைப்பு மீன்களைத் திடீரென மின்னல் வேகத்தில் தாக்குவதற்கு உதவியாக உள்ளது. இதனால் தாக்கப்பட்ட மீன், அம்பு போன்று நீண்டிருக்கும் இதன் கீழ்த்தாடையின் நுனியில் செருகிக்கொள்ளும். உடனே பாம்புதாரா தனது தாடையை ஒரு உதறு உதறும். கீழ்த்தாடையில் சிக்கிய மீன் ஆகாயத்தில் எழும்பி கீழே வர தனது வாயைப் பிளந்து தலைமுதலில் உள்ளே செல்லும்படி லாவகமாக விழுங்கும். தனது தலையையும் கழுத்தையும் விட பெரிய மீன்களைக் கூட பாம்புதாராக்கள் எளிதில் விழுங்கக்கூடியவை.
நீர்ப்பறவைகளான வாத்துகள் மற்றும் முக்குளிச்சான் போன்று இப்பறவையின் இறகுகளில் மெழுகுத்தன்மை காணப்படாததால் தான் நன்கு நனைந்த தனது சிறகுகளை மரக்கிளைகளில் அமர்ந்து விரித்து உலர்த்துகின்றன.
வழுவாங்கிகள், கொக்குகள், நாரைகள் மற்றும் நீர்க்காக்கைகளோடு சேர்ந்து குளக்கரைகளில் உள்ள மரங்களில் கூடுகட்டுகின்றன.
குச்சிகளை அடுக்கி மேடை போன்று ஏற்படுத்தி கூடமைத்து முட்டை வைக்கின்றன. இது வெளிநாட்டுப் பறவையல்ல.
முக்கியமாக ஒரு குளத்திலோ அல்லது குட்டைகளிலோ வழுவாங்கி என்றழைக்கப்படும் பாம்புதாராக்கள் இருந்தால் அந்த நீர்நிலை வளம் மிகுந்திருப்பதாகக் கருதப்படும். ஆம், நீர்நிலைகள் மாசுபட்டுள்ள இடங்களில் பாம்புதாராக்கள் வருவதில்லை. நீர்நிலைகளின் தரத்தை பறவைகளும் நிர்ணயிக்கின்றன என்பதற்கு பாம்புத்தாரா ஓர் உதாரணம்.
பறவைகளைப் பார்த்து, ரசிப்பதோடு, பாதுகாக்கவும் செய்வோம். அவற்றின் உதவியோடு சூழல் மாசுபாட்டை முன்னரே தெரிந்து கொண்டு தடுப்போம்.