கூரிய நீண்ட அலகையும் தலையில் விசிறி போல விரியக்கூடிய கொண்டையும் கொண்டிருக்கும் இந்தப் பறவையின் பெயர் கொண்டலாத்தி (Eurasian Hoopoe). மைனா அளவு பருமன் கொண்ட இந்தப் பறவையின் தலையும் வயிறும் இளம் பழுப்பு நிறமாக இருக்கும். இறக்கையிலும் வாலிலும் கருப்பு வெள்ளை வரிப்பட்டைகள் இருக்கும். ஊப்…ஊப்..ஊப்… என அழகான இதன் குரலை வைத்தே இதற்கு ஹூப்பு என ஆங்கிலத்தில் பெயரிட்டார்கள்.
பெரும்பாலும் பகலில் தரையில் மெதுவாக நடந்தபடியே இரை தேடிக் கொண்டிருக்கும். மண்ணைக் கிளறியும் காய்ந்த இலைகளின் அடிப்புறத்தை திருப்பிப்போட்டு தேடிப்பார்த்தும் இரைதேடும். ஆகையால் இவை மண் கொத்தி என்றும் அழைக்கப்படுகின்றன.
புல்வெளி, வயல்வெளி போன்ற இடங்களில் காணப்படும் இந்தப் பறவைகள் விவசாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் புழு பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன.
இவை மரப்பொந்து, வீடுகளில் உள்ள சாரம் கட்டும் பொந்து, அகலமான சுவர்ப் பிளவு போன்ற இடங்களில் இறகுகள், கந்தைத் துணிகள், மயிர் மற்றும் வைக்கோல் போன்றவற்றை வைத்து பந்துபோல் கூடமைக்கின்றன. கூடுகளில் பலத்த துர்நாற்றம் வீசும். கூட்டினுள் 5-6 முட்டைகள் வரை வைத்து அடைகாக்கும். வெள்ளை நிறங்களில் இருக்கும் முட்டைகள் நாளடைவில் அழுக்கடைந்துவிடும். ஆபத்து வரும் நேரங்களில் இதன் தலையில் உள்ள விசிறி போன்ற இறகுகள் விரிந்து மூடுவது அழகு.