மின்மினிப்பூச்சிகள் இரவு நேரங்களில் நட்சத்திரங்கள் நகர்வது போன்று கானகங்களில் பறந்துகொண்டே பிரகாசிப்பதைப் பார்த்து வியக்காதவர் உண்டா!
மின்மினிப் பூச்சிகள் மின் புழுக்கள் (Glow Worm), மின் வண்டுகள் (Fireflies) என்ற வகைகளாகக் காணப்படுகின்றன.
மின்மினிப் பூச்சிகளின் அடிவயிற்றில் லூசிஃபெரின் என்ற கரிமப் பொருள் உள்ளது. அப்டாமினல் டிராக்கியா என்ற சுவாசக் குழாய் வழியே உயிர்வளி ஆக்சிஜன் அடிவயிற்றினுள் செல்லும்போது, அங்கிருக்கும் லூசிஃபெரினுடன் கலந்து வேதியியல் மாற்றம் நிகழ்ந்து பழுப்பு, மஞ்சள், பச்சை, சிவப்பு எனப் பல்வேறு நிறங்கள் உமிழப்படுகின்றன. மின்மினிப் பூச்சியின் உடலில் யூரிக் அமிலப் படிகங்கள் உள்ளதால் அவ்வாறு வெளிவரும் ஔியை அவை பிரதிபலிக்கின்றன.
மின்மினிப்பூச்சிகள் வண்டினத்தைச் சார்ந்தவை. இதன் உடல் முழுதும் ஔிர்வதில்லை. மூன்று அடுக்குகள் கொண்ட அடி வயிற்றிலுள்ள ஔியுமிழ் உறுப்பில் மட்டும் தான் ஔிர்தல் நிகழ்கின்றன.
மின்மினிப்பூச்சிகள் மண்புழுக்களையும் சிரிய நத்தைகளையும் விருப்ப உணவாக உட்கொள்கின்றன. மின்மினிகள் தனது இரையைப் பிடித்து மயக்கமடையச் செய்து தனது கொடுக்கால் ஊசியைப் போன்று இரையை குத்தி தனது செரிமான நொதிகளான வேதிப்பொருளை இரையுடைய உடலினுள் செலுத்தி உள் உறுப்புகளை கூழ்மமாக்கி உறிஞ்சுகின்றன.
இரவாடிகளான வௌவால்களும் இரவுப்பக்கிகளும் இதை இரைக்காகப் பிடித்தாலும் சாப்பிடுவதில்லை. ஏனெனில் வேதியல் மூலக்கூறுகள் இதன் உடலில் நச்சுத்தன்மையோடு இருப்பதால் இவற்றை பறவைகள் உண்பதில்லை. மேலும் இந்தப் பூச்சிகளின் பின்புறம் ஔிரும் ஔி சுடாது. வெப்பமற்றுக் காணப்படும் இதன் வெளிச்சத்தில் புற ஊதாக்கதிரோ அல்லது சிவப்பு ஊதா கதிரோ கிடையாது.
மின்மினிப் பூச்சிகள், வெளிச்சத்தின் வழியே தங்களது சகலவிதமான உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன. மேலும் இவை கூட்டம் கூட்டமாகப் பறப்பதே உணவின் இருப்பு, வாழ்விடச் சிக்கல், எதிரிகளின் தாக்குதல் போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத்தான்.
மின்மினிகளில் ஆண் பூச்சிக்கு நீண்ட இறக்கைகள் உள்ளதால் அது மட்டுமே பறக்கின்றன. பெண் பூச்சிகள் பறப்பதில்லை ஆனால் இதற்கே அதிகமாக ஔி உண்டு. சில இனங்களில் பெண் பூச்சிகள் வண்டுகளாக உருமாறாமல் புழுக்களாகவே இருந்து விடுகின்றன. அவை தான் Glow Worms எனும் மின்மினிப் புழுக்கள் ஆகும்.
தூக்கணாங்குருவிகள் மின்மினிப் பூச்சிகளை தங்கள் கூடுகளின் உள்ளே குஞ்சுகளுக்கு வெளிச்சத்திற்காக பிடித்து ஒட்டி வைத்துக்கொள்ளும் விந்தையான நிகழ்வுகளும் நடக்கின்றன. பழங்காலத்தில் வெளிச்சத்திற்காக கண்ணாடிக் குடுவைகளில் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வைத்து இரவு நேர காட்டுப் பயணத்திற்குப் பயன்படுத்தியதாக சான்றுகள் உள்ளன.
நற்றினை, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் நமது முன்னோர்கள் இந்தப் பூச்சிகளை அறிவியல் நோக்குடன் பதிவு செய்துள்ளது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.