பச்சைப் பாம்பு (Green vine Snake) மிகவும் அழகானது, ஒல்லியானது, வழவழப்பான மங்கிய செதிள்களுடன் கூரிய தலையுடன் பிரகாசமான பச்சை நிறத்தையுடையது. இது, அதிகபட்ச அளவாக 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை வளரக்கூடியது.
கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் உயரம் வரை வாழக்கூடிய பச்சை பாம்புகள் மெலிந்தும் தலை கூர்மையாக நீண்டும் காணப்படும். உடலின் கீழ்ப்பகுதி சற்று மங்கிய பச்சை நிறம் அல்லது மஞ்சள் நிறமாக அமைந்திருக்கும். பயம் கொண்டால் கழுத்தையும் உடலையும் புடைத்துக் காண்பிக்கும். முட்டை வடிவமான கண்களைக் கொண்டுள்ள பச்சைப் பாம்பு இந்தியாவில் காணப்படும் பாம்புகளிலேயே வித்தியாசமானது. எங்கும் பரவி வாழ்ந்து வரும் இந்தப் பாம்புகள் நன்கு உருமாற்றம் செய்வதால் எளிதில் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
தாழ்ந்த புதர்ச்செடிகள், மழைக்காடுகளில் உள்ள நெடிதுயர்ந்த மரங்கள் மற்றும் சமவெளிகளில் உள்ள மரங்கள் போன்றவையே இவற்றின் வாழ்விடங்கள் ஆகும்.
பச்சைப் பாம்புகளுக்கு கடைவாயில் நச்சுப்பற்கள் இருப்பதால் தனது இரையைப் பிடித்தவுடன் வீரியம் குறைந்த நஞ்சைச் செலுத்திக் கொன்றுவிடுகின்றன. இந்தப் பாம்புகளின் நஞ்சு மனிதனை எதுவும் செய்வதில்லை.
இந்தப் பாம்புகள், உணவுக்காக தவளைகள், பல்லிகள், சுண்டெலிகள் மற்றும் சிறுபறவைகள் போன்றவற்றை இரையாக உட்கொள்கின்றன. இவை, ஆகஸ்ட் – நவம்பர் மாதங்களில் இனப்பெருக்கம் செய்து, எட்டு குட்டிகள் வரை இடுகின்றன.
பச்சைப் பாம்புகள் மரங்களில் வாழ்வதாலும் அவற்றை மரங்களுக்குள் பார்க்கையில் மனிதர்களின் தலைப்பகுதிக்கு அருகிலேயே இருக்கும் என்பதாலும், அது கண்களைக் கடித்துவிடும் என்று அஞ்சி அதற்கு கண்குத்திப் பாம்பு என்று பெயரிட்டுவிட்டனர். இதன் காரணமாக, இந்த அழகான பாம்புகள் பார்த்தவுடன் அடித்துக் கொள்ளப்படுவதால், தற்போது பெருமளவில் குறைந்துவிட்டன. ஆனால், உண்மையில் பச்சைப் பாம்புகள் குறி பார்த்து மனிதனின் கண்களையே கடிப்பதில்லை. அவை நஞ்சில்லாத பாம்பு என்பதால், கடித்தாலும் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
சூழலுக்கு நன்மை பயக்கும் பச்சைப் பாம்புகளை பார்த்தால் அடித்துக் கொள்வதைத் தவிர்த்து, அதனை இரசிக்கக் கற்றுக்கொள்வோம். ஏனெனில், இவற்றின் இருப்பு நம் சுற்றுப்புறத்தில் பல நன்மைகளுக்கு வழி வகுக்கின்றன. அதோடு, இவற்றால் நமக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதையும் மறந்துவிடாதீர்கள்.