அலையாத்திக் காடுகள்: சுனாமி பேரழிவையே தடுக்க வல்லதா? அவை அழிவதால் நமக்கு என்ன ஆபத்து?

கானகப்பிரியன்

அலையாத்திக் காடுகள் - சுற்றுச்சூழல் - சுனாமி தடுப்பான்கள்
அலையாத்தி தாவரங்கள்

அலையாத்திக் காடுகள் (Mangrove Forest) ஆறுகளின் முகத்துவாரங்கள், உப்பங்கழிகள், ஆற்றங்கால்கள், சதுப்புநிலங்கள், உப்புநீர் ஏரிகள் எனப் பல்வேறு சூழலியல் தகவமைப்பைக் கொண்ட கடலோரத்தில் உவர் தன்மை கொண்ட பகுதிகளில் வளர்கின்றன.

நிலமும் கடலும் சேரும் பகுதிகளில் மண்ணும் நீரும் சேர்ந்த சேற்றுப் பகுதியாக சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்து காணப்படும். உவர் தன்மை கொண்ட இவ்வகையான சூழலில் அலையாத்திக் காடுகள் நன்கு வளர்கின்றன. உவர் நீரில் வளரும் மரங்களையும் தாவரங்களையும் உள்ளடக்கியதே அலையாத்திக் காடு. இந்தக் காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்து திருப்பி அனுப்புவதாலும் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்தி அலைகளின் வேகத்தை ஆற்றுவதாலும், அலையாத்தி காடுகள் என்றழைக்கின்றனர். மேலும், கண்டல் காடு என்றும் கண்ணாச்செடிகள் என்றும் புன்னைக்காடுகள் என்றும் இதை அழைக்கின்றனர்.

உலகில் 110 வகையான தாவரங்கள் 1,37,760 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலோர சதுப்பு நிலங்களில் அலையாத்திக் காடுகளாக வளர்ந்துள்ளன.

அலையாத்திக் காடுகள் - சுற்றுச்சூழல் - சுனாமி தடுப்பான்கள்
அலையாத்திக் காடு

இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் 31 வகையான அலையாத்தி தாவரங்கள் காணப்படுகின்றன. மேலும், மேற்கு வங்கத்தின் சுந்தரவனத்தில் (Sunderbans) 27 வகைகள், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 24 வகைகள், மேற்கு கடற்கரையில் 19 வகைகள், ஆந்திராவில்  18 வகைகள், தமிழ்நாட்டில்14 வகைகள் என்ற அளவில் அலையாத்தி தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிச்சாவரம் பகுதியில் 12 வகையான அலையாத்தி தாவரங்களும் முத்துப்பேட்டை பகுதியில் 8 வகையான அலையாத்தி தாவரங்களும் உள்ளன.

அலையாத்தி காடுகள் பெரும்பாலும் கடல்நீருக்கு அருகிலேயே வளரும். பெரும்பாலான தாவரங்களின் விதைகள் தாய் செடியில் ஒட்டியிருக்கும் பொழுதே முளைக்க ஆரம்பிக்கின்றன. முளைத்த விதைகள் வேர் ஊன்றுவதற்கு வசதியான பருவத்தை எட்டியவுடன் ஈட்டி போன்று சதுப்பில் விழுந்து வளரத் தொடங்குகின்றன. இந்தத் தாவரங்கள் வேர்களால் சுவாசிப்பவை. தண்டுகளிலும் கிளைகளிலும் உள்ள துவாரங்களின் வழியே பிராண வாயுவை உள்ளிழுத்துக் கொள்கின்றன.

அலையாத்திக் காடுகளின் பயன்கள் என்ன?

பல்லுயிர் பெருக்கமாகத் திகழும் அலையாத்திக் காடுகள், பல கடல்வாழ் உயிரினங்களின் பிறப்பிடமாக உள்ளன. இறால், நண்டு, மீன் இனங்கள், பறவைகள், விலங்குகள் போன்றவை வாழ்வதற்குத் தேவையான வசதிகள் அலையாத்திக் காடுகளில் நிறைந்து காணப்படுகின்றன. நண்டு இனங்களின் இனப்பெருக்கம் இந்தக் காடுகளில் தான் அதிகமாக நடக்கின்றன. மேலும் இறால்கள் அதிகமாக உற்பத்தியாவதால் இறால்களின் தொட்டில் என்றும் அழைக்கிறார்கள்.

கடல் சூழலுக்கு தேவையான கரிம வளம் சேர்க்க இந்தக் காடுகளே துணை புரிகின்றன. கடல் அரிப்பிலிருந்து கடலோர கிராமங்களைக் காப்பது மற்றும் சுனாமி போன்ற பேரலைகளைக் கட்டுப்படுத்துவதில், அலையாத்திக்காடுகள் இயற்கை அரணாக விளங்குகின்றன.

பவளப்பாறைகள், கடல் பாசிகளைச் சார்ந்து வாழும் கடல்வாழ் உயிரினங்கள் பல்கிப் பெருக அலையாத்திக் காடுகள் துணை நிற்கின்றன.

அலையாத்திக் காடுகள் - சுற்றுச்சூழல் - சுனாமி தடுப்பான்கள்
சுந்தரவனப் பகுதி அலையாத்திக் காடு

கடலின் உப்புநீரும் நிலப் பகுதியிலுள்ள நன்னீரும் ஒன்றோடு ஒன்றாகக் கலக்காமல் சதுப்பு நிலங்கள் தடுப்பு அரண்களாக இருக்கின்றன. கடலோரப்பகுதியில் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் இவற்றின் பங்களிப்பு அபாரமானது.

தற்போது கடலை ஒட்டிய பகுதிகளில் வேதிமத் தொழிற்சாலைகள் அதிகம் வருவதால் அலையாத்திக்காடுகள் சிறுகச் சிறுக அழிந்து வருகின்றன.

அலையாத்திக் காடுகள் - சுற்றுச்சூழல் - சுனாமி தடுப்பான்கள்
அலையாத்தித் தாவரங்கள் சுனாமி அலைகளில்கூட உறுதியாக நிற்க வல்லவை

தூத்துக்குடி ஆல்கலிக் கெமிக்கல்ஸ், ஹெவி வாட்டர் பிளாண்ட், அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் எனப் பலவேறு தொழிற்சாலைகளின் வேதிம கழிவுகளால் கடல் சார் இயற்கை வளம் அழிந்து வருவது எவ்வளவு பெரிய பின்விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்து, இவற்றைப் பாதுகாக்க அரசு முன்வரவேண்டும்.

அடையாறு முகத்துவாரப் பகுதியில் அழிந்துகொண்டிருந்த அலையாத்திக் காடுகளை மீட்டெடுத்து, அடையாறு பூங்கா அமைத்து பாதுகாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதைப் போலவே தமிழ்நாடு முழுக்கவும் இருக்கும் அலையாத்திக் காடுகளின் இழந்த பரப்பளவை மீட்டெடுத்து பாதுகாக்க தமிழ்நாடு அரசு முனையவேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

152FansLike
225FollowersFollow
85SubscribersSubscribe

Latest Articles