பார்த்தீனியம் நமது நாட்டின் விவசாய நிலங்களில் புகுந்து பெருமளவு ஆக்கிரமித்துள்ள களைச்செடி. கட்டுப்படுத்த முடியாதபடி பரவி எங்கும் முளைத்து விளைநிலங்களை அழித்து வருவதோடு சூழல் மாசு ஏற்படுத்துவதிலும் முன்னணி வகிக்கிறது. பார்த்தீனியத்தின் விதை காற்றின் மூலம் பரவி மனிதர்களுக்கு சுவாசநோய்களை ஏற்படுத்துகின்றன. மேலும் அது உடலில் பட்டவுடன் தோல் அரிப்பையும் ஏற்படுத்துகின்றது.

பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்த பல இராசயன களைக்கொல்லிகள் வந்தாலும் அது சூழலையும் அங்குள்ள நன்மை பயக்கும் பூச்சிகளையும் கொன்றுவிடும். எனவே முடிந்தவரை இயற்கையான முறையில் சூழல் பாதிக்காதபடி பார்த்தீனிய செடிகளை ஒழித்தல் வேண்டும்.

ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைப்பதன் மூலம் நாம் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட செடிகளின் அதிக வளர்ச்சியின் மூலமாக பார்த்தீனியத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தலாம்.
மெக்சிகன் வண்டு
மெக்சிகன் வண்டு, 1984-ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இது பார்த்தீனியத்தை மட்டுமே உண்டு வாழ்கின்றன. இது படிப்படியாகப் பல்கிப்பெருகி தற்போது அனைத்து இடங்களிலும் உள்ள பார்த்தீனியத்தையும் கட்டுப்படுத்தும் வேலையைத் துவங்கியுள்ளன.

மெக்சிகன் வண்டுகளை அதிக எண்ணிக்கையில் சேகரித்து, மழைக்காலங்களில் பார்த்தீனியம் அதிகமாக உள்ள இடங்களில் விடுவதன் மூலம் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்.
பார்த்தீனிய வண்டுகள் சிறியதாகவும் அழகான வரிகளுடனும் இருக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தோடு, உடலில் கருப்பு நிற வளைந்த கோடுகள் கொண்டதாக இருக்கும்.
நாம் தோட்டங்களுக்குள் உலாவும் போது இவற்றைக் கவனித்துப் பார்க்கலாம். மற்றவர்களுக்கும் இது இருக்கவேண்டியதன் அவசியத்தையும் நன்மைகளையும் எடுத்துரைக்கலாம்.