Home அறிவியல் அறிவோம் . புறா பந்தயக்காரர்களை அச்சுறுத்தும் உலகின் அதிவேக பறவை… 325 கி.மீ வேகமுடைய பொரி வல்லூறு!

. புறா பந்தயக்காரர்களை அச்சுறுத்தும் உலகின் அதிவேக பறவை… 325 கி.மீ வேகமுடைய பொரி வல்லூறு!

0
. புறா பந்தயக்காரர்களை அச்சுறுத்தும் உலகின் அதிவேக பறவை… 325 கி.மீ வேகமுடைய பொரி வல்லூறு!

உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கும் பறவை காகத்தின் அளவுதான் இருக்கும் என்றால் நம்புவீர்களா?

ஆம், பொரிவல்லூறு (Peregrine Falcon) என்றழைக்கப்படும் வல்லூறு இனத்தைச் சேர்ந்த பறவைதான் உலகிலேயே வேகமாகப் பறக்கும். அது அளவில் காக்கைக்கு நிகரானதாகத்தான் இருக்கும். இது வேட்டையாடிப் பறவை வகையைச் சேர்ந்தது.

peregrine falcon

இந்த இரைகொல்லிப் பறவை மணிக்கு 325 கிலோ மீட்டர் வேகத்திற்குப் பறக்கிறது. அதிகபட்சமாக 389 கி.மீ வேகமாக பறந்ததும்  பதிவாகியுள்ளது.

வைரி என்றழைக்கப்படும் பொரிவல்லூறு அகன்ற தோள் மற்றும் அடிப்புறம் கொண்டது. கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். கருத்த தலையில் கன்னப் பாகங்களில் கருப்புப் பட்டைகள் காணப்படும். அடிவயிற்றுப் பாகத்தில் கரும் பட்டைகள் காணப்படும். பெண் பறவை ஆண் பறவையைவிட உருவத்தில் பெரியது.

falcon

பொரி வல்லூறுகள் உயர்ந்த மலைமுகடுகளிலும் பெரும் பள்ளத்தாக்குகளின் உச்சியிலும் தனது வசிப்பிடங்களைத் தேர்வு செய்கின்றன. மிக உயரமான இடங்களில் இருந்து தனக்கு இரையாகக்கூடிய  பறவைகள் பறந்து வருவதைக் கவனித்தபடியே அமர்ந்திருக்கும்.

வேட்டையாடும் திறன் மிகுந்த இந்தப் பறவைகள் தனக்கு இரையாகப் போகும் பறவைகளைக் கண்டவுடன் அசுர வேகத்தில் பறந்து இடியென அதைத் தாக்குகின்றன. தாக்கப்பட்ட இரை தரையில் விழுவதற்கு முன்பாகவே ஆகாயத்திலேயே அதைக் கவ்விச் சென்று பழக்கமான பாறைகளின் உச்சியில் அமர்ந்து இறகுகளைப் பிய்த்துவிட்டு உடலை கிழித்து உண்ணும்.

peregrine falcon1

பொரி வல்லூறுகள் முட்டையிடும் காலத்தில் மனிதர்கள் ஏறமுடியாத பள்ளத்தாக்குகளின் உச்சியில் கூடு கட்டுகின்றன. பல ஆண்டுகள் ஒரே இடத்தில் கூடு கட்டும் இயல்புடைய இவை, இடையூறுகள் இலலாமல் இருந்தால் அந்த இடத்திலேயே நிரந்தரமாகத் தங்கியும் விடுகின்றன.

பொரிவல்லூறுகள், கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் வலசை வரும் வாத்துக்களைப் பின்தொடர்ந்தவாறு நமது பகுதிகளுக்கு வந்தடைந்துவிடும். பந்தயப்புறா விடுபவர்கள், அவற்றைக் கண்டு பயந்தே புறாக்களை பந்தயத்திற்குத் திறந்துவிடாமல் வளர்ப்பார்கள் என்று மா.கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here