நீர்ப்பறவைகள்: வாத்துகள் நீருக்குள் மூழ்கினாலும் நனையாமலே இருக்குமா? எப்படி?

கானகப்பிரியன்

வாத்து

நீர்ப்பறவைகளுக்கு பொதுவாகவே வாலின் அடிப்பகுதிக்குச் சற்று மேலே வால் எலும்புச் சுரப்பி எனப்படும் சுரப்பியொன்று உள்ளது. அது  மணமுள்ள கொழுப்புப் பொருளை வெளிவிடுகிறது. பறவைகள் தம் அலகுகளால் இந்த சுரப்பியை அழுத்தி, கொழுப்புகளைப் பிதுக்கி எடுத்து அதைத் தம் இறகுகளில் பூசிக் கொள்கின்றன.

நீர்ப்பறவைகள் நீரில் நனையாமல் நீண்ட தூரம் நீந்தவும் இரைதேட தண்ணீரில் மூழ்கும் போது நனையாமல் இருக்கவும் இந்தக் கொழுப்புகள் உதவுகின்றன. நீர் பறவைகள் அனைத்திற்குமே இந்த சுரப்பிகள் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளன.

வாத்துகள் அடைகாக்கும்போது தன் இறகுகளுக்கு கொழுப்புப் பொருளை பூசிக் கொள்வதில்லை. எனவே, இந்த காலகட்டத்தில் வாத்துகளின் உடலிலிருந்து வாசனை எதுவும் வராது. இதனால் வேட்டையாடிகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றன. மேலும், தனது இறகுகளைப் பிடுங்கி முட்டைகளின் மீது போட்டும் அடைகாக்கின்றன. அதுபோன்ற காலகட்டத்தில் வாத்துகளின் இறகுகளில் உள்ள கொழுப்புப் பொருள் முட்டைகளின் மீதுள்ள நுண் துளைகளை அடைத்துவிட்டால் முளைக்கருவிற்குச் செல்லும் பிராணவாயு தடைபடும். இதனால் குஞ்சுகள் முட்டைகளுக்குள்ளேயே இறந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, அடைகாக்கும் காலங்களில் மணமுள்ள கொழுப்புப் பொருளைப் பூசிக்கொள்ளாமல் அவை தவிர்த்து விடுகின்றன.

Ducks

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்ததுமே, தாய் வாத்து தன்னை சீர்படுத்திக் கொள்கின்றன. மறுபடியும் மளமளவென்று கொழுப்பைப் பிதுக்கிப் பூசிக்கொள்கின்றன. இந்த நிகழ்வு ஒவ்வோர் இரவும் நடக்கின்றது. வாத்துகள் தம் அனைத்து இறகுகளுக்கும் கொழுப்பைப் பூசிய பிறகு, தம் கழுத்திற்கும் தலைக்கும் பூசிக்கொள்கின்றன.

தாய் வாத்து தன் குஞ்சுகளோடு

குஞ்சுகள் பொரிந்து வந்தவுடன் நீரில் இறங்கினால் நனைந்து மூழ்கிவிடும். ஆதலால் நன்கு கொழுப்பைப் பூசிய வாத்துகள், இரை தேடவும் குஞ்சுகளுக்கு இரையை ஊட்டவும் பாதுகாப்பு கருதியும் குஞ்சுகளை முதுகின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு நீந்துகின்றன. அதிகமான குஞ்சுகள் இருந்தால் தாயின் விலாவோடு ஒண்டிச் சென்றே குஞ்சுகள் தங்களைச் சூடு படுத்திக்கொண்டு மூழ்காமல் நீந்துகின்றன.

இந்தச் சிறப்பான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் அடைகாத்துக் கொண்டிருந்த வாத்தின் இறகுகளையும் முட்டையிடத் தொடங்காத வாத்துகளின் இறகுகளையும் தனித்தனியே ஆய்வு செய்து இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

152FansLike
225FollowersFollow
85SubscribersSubscribe

Latest Articles