கருஞ்சிகப்பு நெற்றி, பச்சை கலந்த மேல்பாகங்கள் மற்றும் வெள்ளை கலந்த கீழ் வால் இறக்கை மற்றும் இறகுகள் சேர்ந்த கீழ் பாகங்களைக் கொண்ட இந்தப் பறவையின் பெயர் (Tailor Bird). சுறுசுறுப்பாக புதர் செடிகளுக்குள் புழுக்களைத் தேடிப்பிடித்து உண்ணும் தையல் சிட்டுகள் மிகச் சிறயது. அவற்றின் மொத்த உயரம் 13 செ.மீ.
இவற்றின் மிகவும் அழகான கூப்பிடுதொனியை அனைவருமே கேட்டிருப்போம். ஆனால் பார்ப்பது கடினமாக இருப்பது போலத் தெரியும். நம்முடைய வீட்டுத் தோட்டத்தில்கூட இவற்றைக் காணமுடியும்.
தையல் சிட்டின் உணவாக, சிறு பூச்சிகள் மற்றும் அவற்றின் லார்வாக்கள், பூச்சிகளின் முட்டைகள் ஆகியவை அமைகின்றன. தேன் எடுப்பதிலும் இவற்றுக்கு ஆர்வம் உண்டு. முருங்கை மரப் பூக்களில் அதிகமாக இந்தச் சிட்டுக்களைக் காணலாம்.
கூடுகள்
நீண்ட இலைகளை வெகு அழகாக மடக்கி அதன் ஓரங்களை மடக்கித் தைத்து இவை முட்டையிடுகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலைகளை இணைத்து தைக்கின்றன. தாவரங்களின் நார் மற்றும் வேலிப்பருத்தியின் பஞ்சுகளை கயிறு போலப் பயன்படுத்துகின்றன. சிலந்தி வலையையும் பயன்படுத்தி கூடமைக்கின்றன.
வீட்டிலோ அல்லது திறந்த வெளிகளிலோ உள்ள புதர்ச்செடிகளில் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் இருக்கும்படி இதன் கூட்டை அமைத்து, கூட்டினுள் மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் சிவப்பு, நீலத்தில் அல்லது வெள்ளை, நீலத்தில் இருக்கும். முட்டைகளின் மேல் செந்தவிட்டு நிறத்தில் பொட்டுகள் இருக்கும்.
தீமை பயக்கும் புழு, பூச்சிகளைத் தின்று கட்டுப்படுத்தும் தையல் சிட்டுகள், பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்து சூழலுக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. இவை நம் சுற்றுப்புறத்தில் வாழ்வது நமக்கும் இந்தச் சூழலுக்கும் பேருதவியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.