தாவரங்களின் மறுசுழற்சிக்கும் காடுகளின் வளத்திற்கும் கரையான்களின் பணி மகத்தானது. கரையான்கள் மண்புழுக்களைப் போல பல நன்மைகளைச் செய்கின்றன. மட்கிப் போக நெடுங்காலம் எடுத்துக்கொள்ளும் உறுதியான மரம், இலை போன்றவற்றை உண்டு கரைத்து மண்ணில் கலக்க வைப்பதோடு, மண்ணை அடிக்கடி புரட்டிப் போட்டு காற்றும் ஈரமும் ஊடுருவ வழிவகுக்கின்றன. இவற்றின் கழிவுகள் மூலம் மண்ணின் வளத்தைப் பெருக்குகின்றன.
கரையான்கள் 20 கோடி ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்வதாக தொல்லுயிர் எச்சங்கள் உறுதி செய்கின்றன. பருவமடைந்த ராணி கரையான் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முட்டைகள் இடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கரையான் புற்று
கரையான்கள் தங்கள் புற்றுகளை அமைப்பதற்கு, மிதமான தட்பவெப்பம் நிகழும் வாழ்விடங்களையே தேர்வு செய்கின்றன. புற்றுகள் கட்டும் வேலையை பணிக்கரையான்களே செய்கின்றன. புற்கள், மரத் துகள், மண் கலவை, உணவின் எச்சம், கரையான்கள் உமிழும் அமிலம் ஆகிய சேர்மானப் பொருட்களைக் கொண்டு கூம்பு வடிவத்தில் தங்களது புற்றுகளை வடிவமைக்கின்றன. சீரான சூரிய ஔி உட்செல்லவும் காற்றின் போக்கைத் தடுத்து காற்றை உட்செலுத்தியும் மழையில் தண்ணீர் உள்ளே செல்லாமல் இருக்க குடை போன்ற அமைப்பை கட்டமைத்தும், சூழலுக்கு ஏற்றவாறு பல நுட்பங்களோடு தங்கள் புற்றுகளை கரையான்கள் உருவாக்குகின்றன.
கரையான் புற்றுகளில் லட்சக்கணக்கான கரையான்கள் வாழ்கின்றன. கரையான்களை நான்கு வகையாகப் பிரிக்கின்றனர். ராணிக்கரையான், ஆண் கரையான், வாகைக்கரையான், பணிக் கரையான் என வகைப்படுத்துகிறார்கள். கரையான்களை வழி நடத்த ராணியும் இனக்கலவி புரிய ஆண் கரையானும் பாதுகாப்புப் பணியில் வாகைக் கரையானும் உணவு மற்றும் புற்றை உருவாக்குவதற்கு பணிக்கரையான்களும் திட்டமிட்டு வேலைப்பிரிவுகளை உருவாக்கிக் கொண்டு சமூக வாழ்க்கை வாழ்கின்றன.
வேனில் காலங்களில் கரையான்கள் என்ன செய்கின்றன…?
வேனில் காலங்களில் கடும் வெயிலால் புற்கள் காய்ந்து போய்விடுகின்றன. அதிகாலை நேரத்திலோ அல்லது அந்திசாயும் பொழுதிலோ, கரையான்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து காய்ந்த புற்களைத் தேடிச் சென்று தனது வாயால் கடித்து ஒரே சீரான சிறு சிறு துண்டுகளாக்கித் தூக்கி வந்து நிலத்துக்கடியில் சுரங்கம் போன்ற தனது கூட்டில் ஈரப் பசையைக் கலந்து அடுக்கி வைத்து மேற்பரப்பை நன்கு மூடிவிடுகின்றன. அவை, மெல்ல சிறிது நாட்களில் பூஞ்சைகளாக மாறி, பிறகு காளான்களாக மாறிவிடுகின்றன. கரையான்களுக்கு மிகவும் பிடித்த உணவு காளான்களே. கரையான்கள் பூஞ்சைகளை தோற்றுவிப்பதே, அந்தக் கூட்டில் பின்னாளில் உற்பத்தியாகும் குஞ்சுகளுக்கு குளுகோஸ் போன்று சிறந்த உணவாக அவை பயன்படுவதற்கே.
தாவரங்களின் மறுசுழற்சிக்கும் ஒரு பொருள் மட்கி மற்றொரு பொருளாக உருவெடுக்கவும் கரையான்கள் மிகச் சிறப்பாக பணியாற்றுகின்றன. தாவரங்களின் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற கரையான்களின் பங்களிப்பு மகத்தானது.
ஈசல்கள்
நன்கு முதிர்ந்து இறகு முளைத்த கரையான்களே ஈசல்களாக வெளிவருகின்றன. இடப்பற்றாக்குறையின் காரணமாகவும் இனப் பெருக்கத்திற்காகவும் வேனில் காலம் முடிந்து முதல் மழை பெய்து மண் ஈரமான சூழலில் ஈசல்கள் வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேறும் ஈசல்களை பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு புரதச்சத்துகளுக்காக பெருமளவு ஊட்டுகின்றன. ஈசல்களை வேலி ஓணான், பல்லிகள், பறவைகள், உடும்புகள், சில விலங்குகள் எனப் பலவும் சாப்பிடுகின்றன.
ஒருமுறை ஈசல்கள் வரவில்லை என்றால் போசாக்குப் பற்றாக்குறையால் பல லட்சம் பறவைக் குஞ்சுகள் இறந்துபோகின்றன. பறவை குஞ்சுகள் குறுகிய காலத்தில் நன்கு வளர்ச்சியடைய ஈசல்களே பெரிதும் உதவுகின்றன.
பல்லுயிரிய வளங்களில் ஒவ்வொரு உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்து உயிரோட்டமான வலைப் பின்னலைப் பேணுகின்றன. அவற்றையெல்லாம் உணர்ந்து நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே சிறப்பு.
குறிப்பு: கரையான் புற்றுகளில் பாம்புகள் இருக்காது. ராணிக்கரையானை உண்பதற்காக என்றாவது ஒருநாள் பாம்புகள் உள்ளே சென்று வெளியேறிவிடும். நிரந்தரமாக புற்றுகளில் பாம்புகள் இருக்கும் என்பது மூடநம்பிக்கையே.