Home பெருங்கடல் ஒளி படைத்த கண்ணினாய் (Light Sea)

ஒளி படைத்த கண்ணினாய் (Light Sea)

0
ஒளி படைத்த கண்ணினாய் (Light Sea)
Light Sea-Night beach

நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் கீழே அமர்ந்து, இருளின் அழகோடு கதைகளைப் பரிமாறிக்கொண்ட மரபு உடையது மனித இனம். ஒரு காலத்தில் சூரியனும் நிலவும் வருவதைப் பொறுத்தே மனிதனின் அன்றாட நடவடிக்கைகள் அமைந்தன. பகலின் வெளிச்சத்தை இரவுக்கும் கடத்துவதற்காக மனிதன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல, தீப்பந்தம், அகல் விளக்கு, காற்றடித்தாலும் அணையாத அரிக்கேன் விளக்கு என்று மெதுவாய் ஊர்ந்துகொண்டிருந்த வழித்தடத்தில் ஒரு அசுரப் பாய்ச்சலை ஏற்படுத்தியது மின்விளக்கு. மனித இனத்தின் கண்டுபிடிப்புகளிலேயே சக்கரத்துக்கு இணையான முக்கியத்துவம் பெற்றது என இந்த மின்சார விளக்கை தாராளமாகச் சொல்லலாம். “ஒரு ஸ்விட்சைப் போட்டுவிட்டால் போதும், ஒவ்வொரு இரவிலும் நம்மை சூழ்கிற இருளின் திரையை விலக்கிவிட முடியும்! என்ன மாயம்!” என்று எழுதுகிறார் கட்டுரையாளர் நாடியா ட்ரேக்.

இரவிலும் தொடர்கிற வெளிச்சம் எந்த அளவுக்கு மனித நாகரிகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததோ, அதே அளவுக்குப் பிரச்சனைகளையும் கூடவே அழைத்து வந்தது. செயற்கை ஒளி நம் உடலின் இயல்பான சுழற்சியை மாற்றியமைப்பதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என்று உலகெங்கிலும் மருத்துவர்கள் எச்சரித்தபடி இருக்கிறார்கள். மின்விளக்குகளால் குழப்பமடைந்து பறவைகள் இறக்கின்றன. இந்த ஒளி மாசுபாட்டால் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், பொதுத்தளத்தில் அவ்வளவாக விவாதிக்கப்படாத வாழிடம் ஒன்று உண்டு – அதுதான் கடல்.

Light Sea-SeaTurtle
Light Sea-SeaTurtle

ஒளி மாசுபாட்டின் தீவிரம்

உலகளவில் 100 பில்லியன் மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 23 சதவிகிதத்தினர், கடற்கரையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிக்கிறார்கள். உலகப் பெருநகரங்களில் 7 சதவிகிதம், கடற்கரை நகரங்களாகவே இருக்கின்றன. 2060-ஆம் ஆண்டுக்குள் இது இருமடங்காகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவு வானில், மொத்தம் 18.7% காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

2001-இல் வெளிவந்த ஓர் ஆய்வின் முடிவு அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறது. இரவில் ஒளி குறையும்போது, நம் கண்ணுக்குள் இருக்கும் கூம்பு அணுக்கள் (Cone cells)  தங்கள் பங்களிப்பைக் குறைத்துக்கொள்கின்றன, தண்டு அணுக்கள் (Rod cells) செயல்படத் தொடங்குகின்றன.  60 விழுக்காடு அமெரிக்கர்கள், செயற்கை ஒளி நிறைந்த இரவுச் சூழலிலேயே வசிப்பதால், இந்த இயல்பான அன்றாட மாற்றம் அவர்களின் கண்களுக்குள் முழுவதுமாக நடப்பதேயில்லை!

Light Sea-Coral Reproduction
Light Sea-Coral Reproduction

2010-இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உலக கடற்கரைப்பகுதிகளில் 22 விழுக்காடு இடங்கள் ஒளி மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றன என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிலத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை ஒளி விளக்குகள், வருடாவருடம் குறைந்தது ஆறு சதவிகிதம் அதிகரிக்கின்றன என்ற கணிப்பையும் சேர்த்துப் பார்த்தால், கடந்த பத்து வருடங்களில் இந்த பாதிப்பும் எவ்வளவு தூரம் அதிகரித்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இரவிலும் தொடர்ந்து இயங்கக்கூடிய லாஸ் வேகாஸ் போன்ற கேளிக்கை/வணிக நகரங்களால் ஏற்படும் பாதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கிறது. நகரத்தின் மையப்புள்ளியிலிருந்து 70 கிலோ மீட்டர் சுற்றளவு வரை கூட இந்த ஒளியின் மாசுபாடு அதே தீவிரத்துடன் இருக்கிறது.

Light Sea-Bioluminescence
Light Sea-Bioluminescence

ஒளி மாசுபாட்டில், விண்ணொளி (Skyglow) என்பதும் ஒரு முக்கியமான அங்கம். கப்பல்களில், படகுகளில் போகும்போதோ, விமானங்களில் பயணிக்கும்போதோ இதை நாம் கவனிக்கலாம். ஒரு நகரத்தை நெருங்கும்போதே அந்த இடத்தில் உள்ள வானமே பிரகாசமாகத் தெரியும். வாகனங்களின் ஒளி, கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் விளக்குகள், தெரு விளக்குகள், இரவு நேரங்களில் இயக்கப்படுகிற ஒளி நிறைந்த பேனர் விளம்பரங்கள் எல்லாம் சேர்ந்து, வானத்துக்கே லேசான ஒரு வெளிச்சத்தைப் பூசும் நிகழ்வுதான் இந்த விண்ணொளி. இது ஒளிச்சிதறலால் நடக்கிறது.

உலகின் மொத்த மக்கள் தொகையில் 80% பேர் இந்த விண்ணொளிக்குக் கீழேதான் வசிக்கிறார்கள் என்கிறது ஒரு தரவு. விண்ணொளி இருக்கிற நகரங்கள், கடற்கரைக்கு அருகிலிருக்கும் பட்சத்தில், அந்த ஒளி மாசு கடலையும் பாதிக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கடற்கரை நகரத்தை ஆராய்ந்ததில், ஒளி மாசுபாடு கடலின் தரை வரை சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒளி நிறைந்த நகரத்துக்கு அருகில், 76% ஆழ்கடல் பரப்பு ஒளி மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது. பச்சை நிற ஒளி அலைகள் அதிகம் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 Light Sea-City lights
Light Sea-City lights

இதில், எல்.ஈ.டி விளக்குகளின் வருகை ஒரு முக்கியமான நிகழ்வு. குறைவான ஆற்றலை செலவழித்து அதிக வெளிச்சத்தைத் தரும் இந்த விளக்குகள் பெரிய வரவேற்பைப் பெற்றன. இவற்றின் விலையும் குறைவாக இருந்தது. பலர் உடனடியாக சாதா விளக்குகளிலிருந்து எல்.ஈ.டி விளக்குகளுக்கு மாறினார்கள். ஆனால், சாதா மின்விளக்குகளோடு ஒப்பிடும்போது, இந்த எல்.ஈ.டி விளக்குகளின் அலைக்கற்றை (spectrum) அகலமானது. ஆகவே, பல்வேறு அலைநீளங்கள் உள்ள ஒளிக்கதிர்கள் இவற்றிலிருந்து வெளியாகும். ஒவ்வொரு ஒளிக்கதிருக்கும் கடல்நீருக்குள் ஊடுருவும் தன்மை மாறுபடும் என்பதால், இதுபோன்ற விளக்குகளின் பாதிப்பும் பரவலானதாக இருக்கும்.

கடல்வாழ் சூழலில் ஒளியால் ஏற்படும் பாதிப்புகள்

கடல் சூழல் என்பது ஒளியால் செலுத்தப்படுவது. சூரிய ஒளி ஊடுருவும் எல்லை, இருளும் ஒளியும் கலந்த பகுதி, இருட்டான ஆழ்கடல் என்று கடலின் பொதுவான பகுப்புக்கே ஒளிதான் அடிப்படை. நிலத்தைப் போலவே இரவாடிகள், பகல் வேட்டையாடிகள் என்று கடல் விலங்குகளிலும் வகைமைகள் உண்டு. நிலவின் சுழற்சியைப் பொறுத்து வாழ்வின் நிகழ்வுகளை வகுத்துக்கொள்ளும் கடல் விலங்குகள் உண்டு. இவை எல்லாமே செயற்கை ஒளியால் சிதைக்கப்படுகின்றன. கப்பல்கள், கடற்கரை நகரங்களின் ஒளி, கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் மையங்கள், தூரத்து நகரங்களின் விண்ணொளி என்று ஒளி மாசுபாட்டுக்குப் பல காரணிகள் உண்டு.

எடையை மட்டும் வைத்துப் பார்த்தால் உலகிலேயே மிகப்பெரிய வலசையாகப் பார்க்கப்படுவது மிதவை உயிரிகளின் (Zooplankton) தினசரி வலசை தான். சூரியன் மறையும்போது ஆழ்கடலிலிருந்து இவை கடற்பரப்புக்கு வருகின்றன. இரவு முழுவதும் கடற்பரப்பில் வேட்டையாடிவிட்டு, சூரிய ஒளி வரத்தொடங்கியதும் இவை மீண்டும் ஆழ்கடலுக்குள் சென்றுவிடுகின்றன. ஒளி குறைவதும் கூடுவதும் மட்டுமே இவற்றுக்கான சமிக்ஞை என்பதால், செயற்கை ஒளி வரும்போது, இந்த வலசையில் குழப்பம் ஏற்படுகிறது.

இரவு வானில் இயல்பாகப் பறக்கிற பறவைகள் கப்பல்களின் ஒளியால் குழப்பமடைந்து, அவற்றின் கம்பங்களில் மோதி இறக்கின்றன. இரவின் செயற்கை ஒளி, முட்டைகளிலிருந்து வெளிவரும் கடலாமைக் குஞ்சுகளைப் பாதிக்கிறது. அவை சரியாகக் கடலைச் சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவற்றின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. ஓதங்களை முன்வைத்து நடக்கிற வலசையும் (Tide based migrations) கடலோரங்களில் உண்டு. மணலில் வசிக்கிற சிறு கணுக்காலிகளின் வலசை, செயற்கை ஒளியால் பாதிக்கப்படுகிறது. ஒளி மாசு அதிகம் இருக்கிற கடற்பகுதிகளில், மீன்குஞ்சுகளின் வளர்ச்சி தடைபடுகிறது, அவற்றின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.

 Light Sea-Night beach
Light Sea-Night beach

செயற்கை ஒளியை மட்டும் வைத்து, சூரியன் வந்துவிட்டது என்று குழம்பி, பகல் விலங்குகள் வெளியில் வந்து மேய்கின்றன. இதனால் இரவாடிகளுக்கு அவை இரையாகிவிடுகின்றன. இரவு-பகல் என்ற சுழற்சியில், வேட்டையாடி விலங்குகளுக்கும் இரை விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் நுணுக்கமானது. இந்த நுண் உறவு சிதையும்போது உயிரினங்களின் எண்ணிக்கையும் சூழல் சமநிலையும் உடைகிறது.

பவள உயிரிகள், குதிரைலாட நண்டுகள், கடல்புழுக்கள், கோமாளி மீன்கள் உள்ளிட்ட பல கடல் வாழ் விலங்குகளுக்கு, நிலவுதான் இனப்பெருக்கத்துக்கான நாள்காட்டி. நிலவின் ஒளியை முன்வைத்துதான் இவற்றின் உடலில் இனப்பெருக்கத்துக்கான வேதிப்பொருட்கள் தூண்டப்படுகின்றன. செயற்கை ஒளி சூழ்ந்துவிட்ட கடலில், இயற்கையான இந்த சுழற்சி கலைத்துப்போடப்படுகிறது. தொடர்ந்து தவறான பருவத்தில் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள் காலப்போக்கில் அழியக்கூடும்.

பல கடல் விலங்குகளுக்கு ஒளியே ஒரு மொழியாக இருக்கிறது. இரை பிடிக்க, வேட்டை விலங்குகளிடமிருந்து மறைந்து கொள்ள, இணையைக் கவர, சண்டையிட்டு ஆதிக்கத்தை நிரூபிக்க, எல்லாவற்றுக்குமே உயிர் ஒளிர்தலை (Bioluminescence) பயன்படுத்தும் விலங்குகள் உண்டு. ஒளியற்ற இரவு நேரக் கடலில் மட்டுமே இந்த மொழி பயன்படும். செயற்கை ஒளி வந்துவிட்டால் இந்த மொழியால் எந்தப் பலனும் இல்லை. சந்தடி நிறைந்த ஒரு திருவிழாவில் குரலையும் உயர்த்தாமல் எப்படி இருவரால் பேசிக்கொள்ளமுடியும்?

கடலும் நிலமும்

ஒளி மாசுபாடு பற்றிய விவாதங்களில், மனிதனுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், இரவு வானில் நட்சத்திரங்களையே பார்க்க முடியாதது பற்றிய குறிப்புகள், விளக்குகளால் ஏற்படும் பறவைகளின் மரணங்கள் ஆகியவையே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. ஆழ்கடல் வரை ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ‘ஒளியால் கடலுக்கு பாதிப்பு’ என்பது போன்ற வாதங்கள் மிகவும் குறைவு. கடல் சூழலியல் பற்றிய பொதுவான புரிதல் குறைவு என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

Light Sea+Credit- Google Earth
Light Sea+Credit- Google Earth

நிலமும் கடலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதையும் கடலுக்கு பாதிப்பு என்றால் அது காலப்போக்கில் நிலத்தையும் பாதிக்கும் என்பதையும் அனைவருமே நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். கடல் பாதிப்பு என்பது தவறாகப் பொருத்தப்பட்ட அச்சாணியைப் போலத்தான். இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது நிலமெனும் தேர் குடை சாய்வது உறுதி.

தரவுகள்

  1. The nature, extent and ecological implications of marine light pollution, T.W.Davies et al, Frontiers of Ecology and Environment, 2014.
  2. Light Pollution in the Sea, Editorial, Marine Pollution Bulletin, 2010.

Biologically important artificial light at night on the seafloor. T.W.Davies et al, Nature Scientific Reports, 2020.

நாராயணி சுப்ரமணியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here