நாம் நம் வீடுகளை அழகுபடுத்திக் கொள்வதற்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளில் கலந்துள்ள நச்சுப்பொருள் மிகவும் ஆபத்தான விளைவுகளைக் குழந்தைகள் மீதும் கர்ப்பினிப் பெண்கள் மீதும் ஏற்படுத்துகின்றது.
அந்த அழகான ஆபத்து, பாரபட்சமின்றிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கர்ப்பிணிப் பெண்கள் உட்பட அனைவரையும் பாதிக்கின்றது. அந்த அழகான ஆபத்தின் பெயர் காரீயம். ஆங்கிலத்தில் LEAD என்று குறிப்பிடப்படும் ஓர் உலோகப் பொருள். இது இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஒருவகையான உலோகம். இதனால், பல வகைகளில் நன்மைகள் கிடைத்தாலும், இவற்றால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பல ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இன்றைய சமூகப் பொருளாதாரத்தில் காரீயம் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதேநேரம், அதுசார்ந்த கழிவுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆரோக்கியக் குறைபாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதனாலேயே, உலகம் முழுவதும் காரீயப் பயன்பாட்டிற்கு எதிரான குரல்கள் கடந்த சில ஆண்டுகளில் வலுத்து வருகின்றன. பொதுவாக, குழாய்கள், பிளம்பிங் பொருள்கள், துப்பாக்கித் தோட்டாக்கள், பேட்டரி, வெடிமருந்து போன்றவற்றில் காரீயம் பயன்படுத்தப்படுகின்றது. அதோடு சேர்த்து, நம் வீடுகளை அழகுபடுத்தக்கூடிய பெயின்ட்களிலும் (Paints) காரீயம் பயன்படுத்தப்படுகின்றது.
நாம் பயன்படுத்தும் பெயின்ட்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதைத் தெரிந்துகொள்ள டாக்சிக் லிங்க் (Toxic Link) என்ற அமைப்பு சமீபத்தில் இந்தியா முழுவதும் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் நாடு முழுக்கக் கிடைக்கக்கூடிய பெரும்பான்மையான பெயின்ட்களில் விதிமுறைகளை மீறி அதிகளவில் காரீய அளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சத்தீஸ்கர், டெல்லி, கோவா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட 32 பெயின்ட் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை தேசியப் பகுப்பாய்வு மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்தனர். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட காரீயத்தின் அளவு 90 ppm என்ற அளவு மட்டுமே. அதற்கு மேல் கட்டுமானங்களுக்கு அடிக்கக்கூடிய பெயின்ட்களில் காரீயம் இருக்கக்கூடாது. ஆனால், ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் நச்சுத்தன்மையுடைய காரீயத்தின் அளவு 10ppm முதல் 1,86,062ppm வரை இருந்தது ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது.
இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் என்னவெனில், அதிகபட்ச காரீய அளவோடு உற்பத்தி செய்யப்படுகின்ற பெயின்ட் தமிழ்நாட்டிலுள்ள திருச்சியில்தான் தயாரிக்கப்படுகிறது. பரிசோதிக்கப்பட்ட பெயின்ட்களில் வெறும் மூன்று வகைகளில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவு, வெளிப்படையாக விதிமீறல் நடந்துகொண்டிருப்பதை நிரூபனம் செய்வதாக இந்த ஆய்வை மேற்கொண்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் அறிவிப்புகளை பெயின்ட் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிய பின்னரும்கூட நாடு முழுவதும் விதிகளை மீறி, உயிருக்கு ஆபத்தான நஞ்சோடுதான் அவர்கள் உற்பத்தி செய்வதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வு குறித்து டாக்சிக் லிங்க் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியச் சந்தைகளில் விற்கப்படும் பெயின்ட்களில் 84 சதவிகித தயாரிப்புகளில் காரீயம் குறித்த ஒழுங்குமுறை மற்றும் பரிந்துரை குறித்த எவ்வித லேபிள்களும் இடம்பெறுவதில்லை. இது அவர்கள் விதிகளை மீறுவதைத் தெளிவாகக் காட்டுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள ஆல்ஃபா சிந்தடிக் எனாமெல் (Alpha Synthetic Enamel) மற்றும் திருச்சியிலுள்ள வென்லாக் சூப்பர் சிந்தடிக் எனாமெல் (Super Synthetic Enamel) ஆகிய இரண்டு நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட 4 மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில், நான்கிலுமே காரீய அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிகமாகக் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியச் சந்தைகளில், காரீயம் அதிகமாகக் கலக்கப்பட்ட பெயின்ட்கள் அதிகளவில் விற்கப்படுகின்றன என்பதை டாக்ஸிக்ஸ் லிங்க் (Toxics link) அமைப்பு நடத்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் வெகு எளிதில் அணுகக்கூடிய, பயன்படுத்தக்கூடிய, குழந்தைகள் நடைபழக கைத் தாங்கலுக்கு உதவக்கூடிய சுவர்களில் தொடங்கி, கை கழுவப் பயன்படுத்தும் குழாய்கள் வரை அனைத்திலும் காரீயம் கலந்திருக்கின்றது.
டாக்ஸிக் லிங்க் அமைப்பினுடைய இந்த ஆய்விற்காகச் சேகரிக்கப்பட்ட பெயின்ட் மாதிரிகளில் 90 சதவிகித பெயின்ட்களில் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக காரீயம் கலந்துள்ளது. கர்நாடகாவிலுள்ள பெங்களூருவிலிருந்து சேகரிக்கப்பட்ட ஜெம்கோல்ட் ப்ரீமியம் எனாமெல் என்ற நிறுவனத்தின் பெயின்ட் மாதிரிகளில் மட்டுமே 10 ppm என்ற அளவில் மிகக் குறைவான காரீயம் இருக்கின்றது. தமிழகத்தில், சென்னையில் அமைந்துள்ள ஆல்ஃபா சிந்தடிக் எனாமெல் என்ற நிறுவனத்தின் பெயின்ட் மாதிரிகளில் 1,61,052 ppm அளவுக்குக் காரீயம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடப் பல நூறு மடங்கு அதிகம். அதேபோல், திருச்சியிலுள்ள வென்லாக் சூப்பர் சிந்தடிக் எனாமெல் என்ற நிறுவனம் தயாரிக்கும் பெயின்ட்களில் 1,86,062 ppm அளவுக்கு காரீயம் கலந்துள்ளதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது.
காரீயத்தின் மீதான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதை இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது. மேலும் நச்சுத்தன்மை வாய்ந்த காரீய உள்ளீடு குறித்த விதிமுறைகள் மற்றும் அறிவிப்புகள் பெயின்ட் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இருந்தும், நாடு முழுவதுமுள்ள பெயின்ட் உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிக காரீயம் கலந்த பெயின்ட்களை தயாரிக்கின்றனர். “இந்தியச் சந்தைகளில் விற்கப்படும் 84 சதவிகித பெயின்ட் மாதிரிகளில் காரீய ஒழுங்குமுறை மற்றும் பரிந்துரைகள் குறித்த எவ்விதமான லேபிள்களும் இடம் பெறவில்லை. நச்சுத்தன்மையுடைய காரீய உள்ளீடு குறித்த சட்ட விதிமுறைகள் நடைமுறையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதும் இதுகுறித்த பரிந்துரை லேபிள்கள் எதுவுமில்லாமல் இந்தியச் சந்தையில் பெயின்ட் விற்கப்படுவது அதிர்ச்சியளிக்கின்றது. இதுகுறித்துக் கண்காணிப்பதற்கான முறையான அமைப்பு எதுவும் இல்லாததே இதற்குக் காரணம்” என்று கூறியுள்ளார் டாக்ஸிக் லிங்க் அமைப்பின் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மொஹபத்ரா.
“வீட்டிலுள்ள பழைய பெயின்ட்களை குழந்தைகள் விளையாட்டாகச் சுரண்டுவதினால் அந்த நச்சு நிறைந்த உலோகம் அவர்களைப் பாதிக்கின்றது. அப்படிக் கலக்கும் காரீயம், குழந்தைகளுடைய கற்கும் திறனைக் குறைத்துவிடும். நுண்ணறிவுத் திறனை, கேட்கும் திறனைப் பாதிக்கும். மூளை மற்றும் நரம்பு மண்டலப் பாதையில் இந்த உலோகத்தின் தீவிரப் பாதிப்பு, சிலநேரங்களில் கோமா மற்றும் உயிரிழப்பு வரையும் கூடக் கொண்டு செல்லும். கர்ப்பினிப் பெண்களுடைய உடலில் இது கலந்தால், கருவிலிருக்கும் குழந்தையின்மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது” என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது.
மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய காரீயத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முறையான வரையறைகள் இல்லை. இருப்பினும், அனைவர் கைகளிலும் மிக எளிதாகப் புரளக்கூடிய பெயின்ட்களில் நச்சுத்தன்மை வாய்ந்த காரீயம் இவ்வளவு அதிகளவில் கலந்திருப்பது, மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது. மேலும் இவை வளர் இளங்குழந்தைகள் மற்றும் கர்ப்பினிப் பெண்களை அதிகளவில் பாதிக்கும் என்பதால், இந்திய அரசு இதன்மீது சிறப்புக் கவனம் செலுத்தியே தீரவேண்டும். உலக சுகாதார அமைப்பினுடைய அறிக்கைப்படி, ஓர் ஆண்டுக்குச் சராசரியாக ஐந்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இந்தக் காரீயம் கலந்த பெயின்ட்களால் பாதிக்கப்படுகின்றனர்.
வளர்ந்த நாடுகளில் காரீயத்தின் தரம், சேர்க்கப்படும் அளவு, கழிவுகளை நிர்வகித்தல் போன்றவற்றுக்கென வலுவான சட்டங்களும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும் இத்தகைய சூழலுக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் பொருள்களை உற்பத்தி செய்தல் மற்றும் அவற்றின் கழிவுகளை நிர்வகித்தல் போன்றவை இன்றளவும் போதிய முன்னேற்றம் காணாமலிருப்பது வேதனைக்குரிய உண்மை.
இதைக் கருத்தில் கொண்டு, நம் எதிர்காலச் சமூக நலனுக்காக இந்திய அரசாங்கம் இதுகுறித்த கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இதுவே, சூழலியல், சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கின்றது.
மதுமதி