பூமியின் பரிணாமப் பாதையில், இயற்கைக்குக் கிடைத்த வியக்கத்தக்க ஓர் உயிரினம்தான் பாம்பு. அவை, பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றனவோ, அதே அளவுக்கு அபாயங்களோடும் இருக்கின்றன. அவற்றின் நஞ்சு மீதான பயம், மனித வரலாற்றில் தோன்றிய பல்வேறு பண்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய பண்பாடுகளில் அந்தத் தாக்கம் இன்றளவு தொடர்ந்தும் வருகின்றது.
அதில், இருளர் போன்ற சில பழங்குடிகளின் பண்பாடுகள் பாம்புகள் பாதுகாப்பிற்கு வழிவகுத்தாலும், பல்வேறு கடவுள் சார்ந்த நம்பிக்கைகளும் சமூகத்தில் பரவிக் கிடக்கும் பயத்தின் அடிப்படையிலான தவறான தகவல்களும் பாம்புகளின் வாழ்வியலுக்கே ஆபத்தை உண்டாக்கியுள்ளன. அப்படிப்பட்ட தவறான தகவல்கள் என்னென்ன, அவை குறித்த அறிவியல் உண்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
- வதந்தி: பாம்புகள் பழிவாங்கும்
உண்மை: தொலைக்காட்சித் தொடர்கள், இந்திய சினிமாக்கள் ஆகியவற்றில் இன்றளவும் மிகப் பிரபலமாக அனைவரும் விரும்பிப் பார்க்கும் கதைக்களமாக இந்தக் கருத்தியல் இருக்கின்றது. ‘நீயா’ திரைப்படம் தொடங்கி, ‘நாகினி’ தொடர் வரையிலும் திரையுலகமும் தொலைக்காட்சி நிறுவனங்களும் மிகப்பெரியளவில் இந்தக் கதைக்களத்தின் மூலம் லாபம் ஈட்டியுள்ளனர். இச்சாதாரி, என்றழைக்கப்படும் பாம்பு, மனித உருவத்திற்கு உருமாறி வந்து தன் துணையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் என்பது தான் இதன் அடிப்படை சாராம்சம். ஆனால், உண்மையில் அப்படியொரு பாம்பே கிடையாது. அதேபோல், பாம்புகளுக்குப் பழி வாங்கும் குணமும் கிடையாது.
முதலில் அப்படியொரு செயலைச் செய்ய, பழி வாங்கவேண்டுமென்ற எண்ணம் மூளையில் உதிக்கவேண்டும். அதற்கு முதலில், பாச்சாதாபம், கவலை போன்ற உணர்வுகளை உண்டாக்கும் திறன் மூளைக்கு வேண்டும். அந்த வகையான உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய திறன் பாம்புகளின் மூளைக்குக் கிடையாது. ஆகவே, அவை, இன்னொரு பாம்பு இறப்பதைக் கண்டு பச்சாதாபமோ கவலையோ கொள்வதில்லை. மாறாக, தன் இருப்பின் மீதான அச்சம் வேண்டுமானால் அவற்றுக்கு ஏற்படலாம். இதனால், ஒருவரைப் பழி வாங்கவேண்டுமென்ற எண்ணமே பாம்புகளுக்கு உதிப்பதில்லை.
நீங்கள் அவற்றின் இரையாக இல்லாதவரைக்கும் உங்களை அது தாக்கப் போவதில்லை. இயற்கையில் பார்த்தோமானால், பாம்புகளுடைய இரை பட்டியலில் மனிதர்கள் வருவதில்லை. இருந்தும், உங்களுக்கு அவற்றால் பாதிப்பு வருகிறதெனில், அந்த இடத்தில் அவற்றுக்கு உங்களால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது ஏற்படுமென்று பயத்தை பாம்புகளிடம் உண்டாக்கும் சூழல் ஏற்பட்டிருக்க. அதுவும் அந்தச் சூழலில் மட்டும் தானே தவிர, அதை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் பாம்புகளுக்கு இல்லை. அதோடு, உங்கள் உருவம் குறித்த ஒவ்வொரு தகவலையும் மூளையில் பதிந்து நினைவில் வைத்து, தேடிப்பிடித்துக் கொல்லும் திறனும் பாம்புகளுக்குக் கிடையாது.
- வதந்தி: பாம்புகள் பால் குடிக்கும்
உண்மை: இந்து மதப் பண்பாட்டில், நாகத்திற்குப் பால் ஊற்றி வழிபட வேண்டுமென்ற சடங்கு உள்ளது. அதோடு, நாகத்தை வழிபடுவது, சிவனை வழிபடுவதற்குச் சமம் என்றும் கூறப்படுகின்றது. ஆதலால், நாகபஞ்சமியன்று, நாகங்களுக்குப் பால் கொடுக்கும் வழக்கம் தமிழகம் உட்பட, இந்தியா முழுக்கவே இருந்து வருகின்றது. ஆனால், பாம்புகள் பால் குடிக்கும் என்பது முழுக்க முழுக்க தவறான நம்பிக்கை.
மனிதர்கள், குரங்குகள், மாடு, ஆடு போன்ற உயிரினங்களை பாலூட்டிகள் (Mammals) என்று அழைப்பதற்குக் காரணமே, நம்முடைய உடலில், பால் உண்டாவதற்கான சுரப்பிகள் இருக்கின்றன என்பதுதான். பாலூட்டிகள், குட்டி போடும்போது, ஆரம்பக்காலத்தில் உணவூட்டத் தேவையான பாலை அவற்றின் உடல் சுரக்கிறது. ஆனால் பாம்புகளைப் பொறுத்தவரை, அவை ஊர்வன (Reptiles) குடும்பத்தைச் சேர்ந்தவை. ஊர்வனங்களின் உடலில், பாலூட்டிகளுக்கு இருப்பதைப் போல் பால் சுரப்பிகள் கிடையாது. ஆகவே, பால் தொடர்பான அனைத்து அம்சங்களும் பாலூட்டிகளுக்கே தனித்துவமானவை.
ஆனால், பாம்பாட்டிகள் பால் குடிக்கும் பாம்புகளைக் காட்டுகிறார்களே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
பாம்பாட்டிகள், பாம்புகளுக்கு வாரக்கணக்கில் நீரையே காட்டாமல் வைத்திருக்கும்போது, அருகிலிருக்கும் நீர் இணைந்த சேர்மப்பொருள் எதுவாக இருந்தாலும் அதைப் பார்த்தவுடன், அருந்தி தனக்குத் தேவையான நீர்ச்சத்தை எடுத்துக்கொள்ளவே பாம்புகள் முயலும். அதனாலேயே அதைப் பருகுகின்றன.
ஆனால், பாலைச் செறிமானம் செய்துகொள்ள, லாக்டேஸ் (Lactose) என்ற நொதிப் பொருள் (Enzyme) தேவை. அதை உண்டாக்கும் திறன் பாம்புகளின் உடலில் கிடையாது. அதனால், ஒருவேளை பாம்புகள் பாலை குடித்தாலும்கூட, அது அவற்றுடைய உடலமைப்பிற்கு விஷமாகத்தான் செயல்படும். அதைக் குடித்தால், அவற்றுக்கு செறிமானக் கோளாறு, வீக்கம், தொற்று போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு உயிரிழக்கும் ஆபத்தும் உண்டு.
- வதந்தி: பாம்புகள் அனைத்துமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
உண்மை: முதலில், விஷத்திற்கும் நஞ்சுக்குமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விஷம் என்பது, உணவு வழியாகவோ சுவாச வழியாகவோ நாம் உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்ட பிறகு, அது நம் வயிற்றுக்குச் சென்று உடலில் கோளாறுகளை உண்டாக்கும். நஞ்சு என்பது, ரத்தத்தில் நேரடியாகச் செலுத்தப்பட வேண்டும். அத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் இந்தியாவில் குறைவுதான். நம் நாட்டில் மொத்தம் 350 வகையான பாம்புகள் வாழ்கின்றன. அதில் 60 மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை. அதிலும், கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன், நாகம், கருநாகம் ஆகியவையே மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானவையாக அறியப்படுகின்றன. மனிதர்கள் எந்தப் பாம்பைப் பார்த்தாலும் அடித்துக் கொல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், நம்மிடையே அடிக்கடி தென்படும், சாரை, கண்டங்கண்டை நீர்க்கோலி என்ற நீர்ப்பாம்பு, ஓலைப்பாம்பு, பச்சைப் பாம்பு, கொம்பேறி மூக்கன் போன்ற பாம்புகள் நஞ்சற்றவை. அவற்றால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
குறிப்பாக, கொம்பேறி மூக்கன் கொடிய நஞ்சுள்ள பாம்பு என்ற மூடநம்பிக்கை மக்கள் மத்தியில் இன்றளவும் இருந்து வருகிறது. உண்மையில், மரமேறும் பழக்கமுடைய, சற்று நீளமான மூக்கைக் கொண்ட பாம்பு என்பதாலேயே அவற்றுக்கு கொம்பேறி மூக்கன் (மரமேறும் மூக்கன்) என்ற பெயர் கிடைத்தது. மற்றபடி, அவற்றால் மனித உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
- வதந்தி: ஐந்து தலை நாகம் உண்மையாகவே இருக்கின்றது
உண்மை: விஷ்ணு என்ற கடவுளின் படுக்கையாக புராணங்களில் குறிப்பிடப்படும் பல தலைகளைக் கொண்ட நாகம் உண்மையாகவே இருக்கிறது என்ற தவறான நம்பிக்கை இன்றளவும் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து வருகிறது. உண்மையில் அதுவொரு ரசிக்கக்கூடிய கற்பனை மட்டுமே. ஆனால், உண்மையிலேயே அப்படிப்பட்ட பாம்புகள் இருக்கின்றன என்று சமூக வலைதளங்களில் பல படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவையனைத்தும் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவையே தவிர உண்மையில்லை.
நாகப் பாம்பின் ஒரு படத்தை ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்து பரப்பப்படுகிறது. இதுபோன்ற பல தலை பாம்புகள் உண்மையில் இல்லை. பொதுவாக, அவ்வளவு தலைகளின் எடையைச் சுமக்கும் திறன் உடலுக்கு இருக்காது. அப்படிச் சுமந்துகொண்டு அவற்றால் உடலை உயர்த்தி, படமெடுத்துக்கொண்டு நிற்கவே முடியாது.
மிக அரிதாக, இரண்டு தலைகொண்ட பாம்பு வேண்டுமானால் இருக்கின்றது. இது பாம்புகளில் மட்டுமின்றி, நிலத்தாமை, நீர்வாழ் ஆமை, பல்லி ஆகியவற்றிலும் இரண்டு தலை உயிரினங்கள் இருக்கின்றன. இவை மிக அரிது. அதோடு, அப்படி இரண்டு தலைகளோடு பிறப்பவையே அதிக நாட்கள் பிழைத்திருப்பதில்லை. இது ஆங்கிலத்தில் பைசெஃபலி (Bicephaly) என்றழைக்கப்படும் ஒரு குறைபாடு தானே தவிர, இதற்கு தெய்வீகத்தன்மை எதுவும் இல்லை.
- வதந்தி: பாம்பாட்டிகளின் மகுடி இசைக்கு ஏற்றவாறு பாம்புகள் நடனமாடும்
உண்மை: பாம்புகள் திறம்மிக்க வேட்டையாடிகள். அதேநேரம், தன் இருப்புக்குச் சிக்கல் வரும்போது அவற்றின் சீற்றமும் அதிகமாகவே இருக்கும். தான் வேட்டையாடும் இரை அல்லது தனக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உயிரினம் எதிரில் இருந்தால், அவற்றின் அசைவுகளை அப்படியே மீண்டும் செய்யக்கூடிய திறன் பாம்புகளுக்கு உண்டு.
பாம்பினால் அதிக அலைவரிசையைக் கொண்ட ஓசைகளைக் கேட்கமுடியாது. ஆனால், அதிர்வுகளை எளிமையாக உணரமுடியும். அந்த அதிர்வுகளை உண்டாக்குவதன் மூலம், தன்னை நோக்கிப் பாம்புகளை வரச் செய்து, எதிரிகள் மற்றும் இரைகளின் அசைவுகளைப் பிரதிபலித்துச் செய்யும் அவற்றின் திறனைப் பயன்படுத்தியே பாம்பாட்டிகள் அந்த வித்தையைக் காட்டுகிறார்கள். மற்றபடி, அவற்றால் இசைக்கு ஏற்பவெல்லாம் நடனமாட முடியாது.
- வதந்தி: பச்சைப் பாம்பு கண்களைத்தான் குறிபார்த்துக் கடிக்கும்
உண்மை: மரங்களில் வசிக்கக்கூடிய பச்சைப் பாம்புகள், பறக்கும் பாம்புகள் போன்றவை பெரும்பாலும் 3 முதல் 4 மீட்டர் உயரமுடைய தாவரங்களில் வசிக்கின்றன. ஒருவர் அந்தத் தாவரங்களுக்கு நடுவே நடந்து செல்லும்போது, அவருடைய முகம், கண், வாய் போன்ற உடல் பாகங்களே அந்தப் பாம்புகளுக்கு அருகில் எளிதில் தாக்கும் வண்ணம் இருக்கும். அதனாலேயே, அவை அந்தப் பகுதிகளைத் தாக்குகின்றன. இருப்பினும், இவை மனித உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவையல்ல.
பாம்புகளைப் பலி சொல்லாதீர்கள்
பறவைகள், பாலூட்டிகளைப் போலவே, பாம்புகளும் நம்மைச் சுற்றி வாழ்கின்ற ஓர் உயிரினம்தான். அவற்றுக்கு மனிதர்களால் சிக்கல் ஏற்படாதவரை, அவற்றால் மனிதர்களுக்கும் சிக்கல் இல்லை. இருட்டில், தவறுதலாக அவற்றை மிதிப்பது, தொந்தரவு செய்வது போன்ற காரணங்களால், ஊர்ப்புறங்களில் பலரும் பாம்புக்கடிக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில், இருட்டான பகுதிகளில் உலவும்போது கையில் டார்ச் லைட்டோடு, கால் வைக்கும் இடத்தைக் கவனித்துச் செல்லுங்கள். அவை நம்மைக் கடிக்க வேண்டும், தாக்க வேண்டுமென்று நினைத்திருந்து தாக்குவதில்லை. தன் அச்ச உணர்வினால், தற்காப்புக்காகவே தாக்குகின்றன. அதிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அறிவுடைமையே தவிர, கண்ணில் பட்ட பாம்புகளையெல்லாம் கொல்வதல்ல.
நம்மைச் சுற்றியிருக்கும் சூழலியல் அமைப்பின் சமநிலை பேணப்பட வேண்டுமெனில், அங்கிருக்கும் பாம்புகளின் இருப்பும் அங்கு மிகவும் தேவை. அந்தத் தேவையை உணர்ந்து பாம்புகளைப் பலி சொல்லாமல், அவற்றின் இருப்பைப் பாதுகாத்து, நாமும் பாதுகாப்பாக வாழ வழி செய்வோம்.
சின்ன கண்ணன்