Home மருத்துவம் நம் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து அரசுக்கு அக்கறையில்லையா… அச்சுறுத்தும் ஆய்வறிக்கை!

நம் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து அரசுக்கு அக்கறையில்லையா… அச்சுறுத்தும் ஆய்வறிக்கை!

0
நம் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து அரசுக்கு அக்கறையில்லையா… அச்சுறுத்தும் ஆய்வறிக்கை!
Children Health 1

 

குழந்தைகளின் ஆரோக்கியத்தை, அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாத்து வைப்பதில் மூத்தவர்கள் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். சூழலியல் சீரழிவுகள், காலநிலை அவசரம், சுரண்டலை நியாயப்படுத்துகின்ற சந்தைப் பொருளாதார முறை போன்றவையே அந்தத் தோல்விக்குக் காரணம் என்று கூறுகிறது கடந்த பிப்ரவரி 19 அன்று வெளியான ஆய்வறிக்கை (https://www.unicef.org/press-releases/world-failing-provide-children-healthy-life-and-climate-fit-their-future-who-unicef).

கடந்த இருபது ஆண்டுகளில், குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து போன்றவற்றில் முன்னேற்றமடைந்திருக்க வேண்டிய நாடுகளில் அந்தச் சதவிகிதம் அஞ்சத்தக்க விதத்தில் குறைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தை ஆரோக்கியம் தொடர்பான 40 வல்லுநர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். “2015-ம் ஆண்டின்போது, உலக நாடுகள் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை ஏற்றுக்கொண்டன. இருப்பினும், ஐந்து ஆண்டுகள் கழித்து அதைத் திரும்பிப் பார்க்கையில், அந்த இலக்கை நோக்கி வெகு சில நாடுகளே பயணிப்பது தெரிகிறது” என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.

 Children Health 3
Children Health 3

காலநிலை அவசரம், சூழலியல் சீர்கேடுகள், அதிகமாகிக் கொண்டிருக்கும் இடப்பெயர்வு மற்றும் சூழலியல் அகதிகளின் எண்ணிக்கை, ஏற்றத் தாழ்வுகள், எளிய மக்களின் பொருளாதாரத்தை வேட்டையாடத் துடிக்கும் பெருமுதலாளிகளின் வியாபார நுணுக்கங்கள் ஆகியவையே ஒவ்வொரு நாட்டிலும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை, அவர்களுடைய எதிர்காலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகளினுடைய குழந்தை நலப் பாதுகாப்பு அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து, குழந்தை ஆரோக்கியம் தொடர்பான இந்த வல்லுநர் குழுவை உருவாக்கியது. அந்த வல்லுநர் குழுதான், நம் குழந்தைகளுடைய எதிர்காலத்தின்மீது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தாக்கம் என்ன என்பது குறித்த இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

 Children Health 5
Children Health 5

துரித உணவு, குளிர்பானங்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்வதன் மூலம் குழந்தைகளுடைய உடல்நலத்தின் மீது அக்கறையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தச் சந்தைப் பொருளாதார முறை. கவரக்கூடிய விளம்பரங்களின் மூலம், குழந்தைகளை அத்தகைய உணவுப் பண்டங்களை விரும்ப வைத்து மீண்டும் மீண்டும் வாங்க வைத்து வியாபாரம் செய்கின்றனர். இவையெல்லாம், குழந்தைப்பருவ உடல் பருமன் பிரச்னையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 1975-ம் ஆண்டின்போது, உலகளவில்  11 மில்லியன் குழந்தைகள் அந்தப் பிரச்னைக்குப் பாதிக்கப்பட்டிருந்தனர். 2016-ம் ஆண்டின் கணக்குப்படி, 124 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதம் கடந்த 41 வருடங்களில் 11 மடங்கு அதிகரித்துள்ளது.

குழந்தைகளின் ஆயுட்காலம், ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து மற்றும் கூடுதலாக, பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு, பொருளாதார ஏற்றத் தாழ்வு, வருமானங்களில் இருக்கும் இடைவெளி போன்றவை குறித்த தரவுகளை 180 நாடுகளிலிருந்து சேகரித்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

Children Health 4_
Children Health 4_

நார்வே, தென் கொரியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஐயர்லாந்து போன்ற நாடுகளில்தான் குழந்தைகளின் வாழ்வும் எதிர்காலமும் சிறந்து விளங்குகின்றன. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், சோமாலியா, நைஜர், மாலி ஆகிய நாடுகள்தான் அந்தப் பட்டியலின் கடைசி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. அதுவே, ஒரு தலைக்கு எவ்வளவு கரிம வெளியீடு இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தபோது, அந்தப் பட்டியலில் மிகக் குறைவான கரிம வெளியீட்டோடு புருண்டி, சாட், சோமாலியா போன்ற நாடுகள் முதல் வரிசையில் வருகின்றன. அதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் அதிகளவில் கரிமத்தை வெளியிட்டு, கடைசிப் பத்து நாடுகள் பட்டியலில் இடம்பெறுகின்றன.

இதிலிருந்தே நடைமுறையிலுள்ள முரண்பாடு புரியும். அந்த முரண்பாட்டைத்தான் இந்த ஆய்வறிக்கை விளக்குகிறது. ஆம், அதிகக் கரிம உமிழ்வைச் செய்கின்ற நாடுகள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேன்மை பெற்றுத் திகழ்கின்றன. அதுவே, இந்த உமிழ்வுகளால் பாதிக்கப்படுகின்ற சோமாலியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் அவற்றால் ஏற்படுகின்ற எதிர்வினைகளையும் பக்க விளைவுகளையும் சந்தித்துக் கொண்டு விளிம்புநிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன.

Children Health
Children Health

கரிம வெளியீடு குறித்த தரவுகளை ஆராய்ந்து பார்க்கையில், குழந்தை ஆரோக்கியத்தில் முதன்மையாக இருக்கும் நாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தன. நார்வே, கரிம வெளியீட்டில் 156-வது இடத்தில் உள்ளது. அதேபோல், கொரியா 166-வது இடத்திலும் நெதர்லாந்து 160-வது இடத்திலும் இருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்கான இலக்காக காலநிலை உச்சி மாநாட்டில் குறிப்பிட்டதைவிட 210 சதவிகிதம் அதிகமாக இந்த மூன்று நாடுகளும் கரிம வாயு வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன.

அல்பேனியா, அர்மீனியா, கிரெனடா, ஜோர்டான், மொல்டோவா, இலங்கை, துனிசியா, உருகுவே, வியட்நாம் ஆகிய நாடுகள், கரிம வெளியீட்டையும் கட்டுக்குள் வைத்து, குழந்தை ஆரோக்கியத்திலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தைக் கண்டு முதல் 70 இடங்களுக்கு உள்ளே இருக்கின்றன. இங்கிலாந்து, குழந்தை வளர்ப்பு சம்பந்தப்பட்ட வரை முதல் பத்து நாடுகளுக்குள் இடம்பெற்றுள்ளது. அதுவே, கரிம வெளியீட்டில் பார்த்தால் 133-வது இடத்தில்தான் இருக்கிறது. 2030-ம் ஆண்டின் இலக்கைவிட 115 சதவிகிதம் அதிகமான கரிமத்தை இங்கிலாந்து தற்போது வெளியிட்டுக் கொண்டிருப்பதாக Union of Concerned Scientists என்ற ஒரு விஞ்ஞானிகள் அமைப்பு கூறுகின்றது.

Children Health 2
Children Health 2

“ஏழை நாடுகள், தங்கள் குழந்தைகளின் திறன் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதேநேரம், வளர்ந்த நாடுகள், கரிம வெளியீட்டைக் கட்டுக்குள் வைத்து வளரும் நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்வுக்கு இருக்கின்ற அச்சுறுத்தலைச் சரிசெய்ய வேண்டும்.

ஏழை நாடுகளில் வாழும் குழந்தைகள்தான், மாறிக்கொண்டிருக்கும் காலநிலையின் தீவிர விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சமூகரீதியாக அவர்களுடைய வளர்ச்சி என்று அனைத்தையுமே, கரிம வாயுவை அளவுக்கு அதிகமாக வெளியிடும் நாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏழைக் குழந்தைகளோ பணக்காரக் குழந்தைகளோ, உலக நாடுகள் வெளியிடும் கரிம வாயு அனைவரையுமே பாதிக்கும். அதையுணர்ந்து அந்த நாடுகள் செயல்படவேண்டும்” என்று கூறுகிறார் ஐக்கிய நாடுகள் குழந்தை நல அமைப்பின் அதிகாரியான ஸ்டீஃபன் பீட்டர்ஸன்.

Children Health 1
Children Health 1

புவி வெப்பமயமாதல் 2100-ம் ஆண்டுக்குள் இன்னும் 4 டிகிரி அதிகமாகிவிடும் என்று காலநிலை அவசரம் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அவற்றை அடிப்படையாக வைத்து, அந்தப் பாதிப்பு குழந்தைகள் மீதுதான் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கின்றது இந்த ஆய்வறிக்கை.

உலகளவில் குழந்தைகள் ஓராண்டுக்குக் குறைந்தபட்சம் 30,000 விளம்பரங்களைத் தொலைகாட்சி வாயிலாகப் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் குழந்தைகளும் இளைஞர்களும் தொலைக்காட்சியில் கால்பந்து, கிரிக்கெட், ரக்பி போன்ற விளையாட்டுகளைப் பார்க்கும்போது ஓராண்டுக்குச் சுமார் 51 மில்லியன் மதுபான விளம்பரங்களை அதன் இடைவேளையின்போது பார்க்கிறார்கள். குழந்தைகளைக் குறிவைத்து சமூக வலைதளங்கள் மற்றும் இதர பல இணையதளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துகிற துரித உணவு நிறுவனங்களால் ஏற்படுகிற பாதிப்புகள் மிகப் பெரியது. இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த 40 பேர்கொண்ட வல்லுநர் குழு, உலக நாடுகளிடம் இந்தப் பிரச்னை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற வேண்டியது குழந்தைகளின் உரிமை. அந்த உரிமை உலகில் வாழும் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டியது அரசுகளின் கடமை. அதற்குத் தடங்கலாக இருக்கக்கூடிய அனைத்தையும் அவர்கள் உடைத்தெறிய வேண்டும்.

“இந்த உலகம் இதுவரைக்கும் எதிர்கொண்டிராத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு எதிர்காலம் நிறைய வாய்ப்புகளைச் சுமந்து நிற்கிறது. அந்த வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், முதலில் அவர்களுக்காகக் காத்திருக்கக்கூடிய அபாயங்களைப் போக்கியாக வேண்டும். நம் முன் நிற்கும் சவால்கள் மிகப் பெரியதுதான். ஆனால், எதிர்கொள்ள முடியாதவை அல்ல. அரசுகள்தான் எதிர்கொள்ளத் துணியாமல் கையறு நிலையில் நம்மை நிற்க வைக்கின்றன”- ஐ.நா ஆய்வறிக்கை.

மதுமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here