ஒரு நாள் கசுஹாரு அரகாவா என்ற ஜப்பானிய ஆராய்ச்சியாளர் தனது வீட்டருகே இருந்த பார்க்கிங் பகுதியில் ஆராய்ச்சிக்காக கான்கிரீட் சுவர்களில் ஒட்டியிருக்கும் பாசிகளில் வாழும் நுண்ணுயிரிகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அதை ஆய்வுக்கூடத்தில் சோதித்துப் பார்க்கும்போது அவர் முகத்தில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி. இன்னொரு புதிய டார்டிகிரேட் (Tardigrade) உயிரனத்தைக் கண்டறிந்த அவர், அவற்றைத் தனது கேயோ பல்கலைக் கழக நண்பர்களோடு சேர்ந்து ஆய்வுக்கூடச் சூழலிலேயே இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினர்.
யார் இந்த டார்டிகிரேடுகள்? செல்லமாக நீர்க்கரடிகள், பாசிப் பன்றிகள் என்று அழைக்கப்படும் இவை அனைத்துமே உருளை வடிவம் கொண்டவை. எட்டு கால்களைக் கொண்ட இவற்றின் ஒவ்வொரு கால் நுனியிலும் தாவரங்களின் அணுச்சுவர்களைப் பிரித்து அதனுள் இருப்பதை எடுத்து உண்பதற்கு ஏதுவாக நகங்கள் இருக்கும். பெரும்பாலும் சைவ உயிரினங்களான இவற்றில் ஒருசில இனங்கள் மட்டும் புலால் உண்ணிகளாக பாசிகளில் படர்ந்து வாழும் மற்ற உயிர்களை உண்டு வாழ்கின்றன. சராசரி முட்டைகளைப் போல் இல்லாமல், மேற்பகுதியில் கிண்ணம் போன்ற வடிவத்தோடு கயிறு வடிவ இழைகளை உடையவை. முட்டையிடும் இடத்தில் அங்கேயே ஒட்டியிருப்பதற்கு இக்கட்டமைப்பு உதவுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த புதிய லார்வா 0.05 மில்லிமீட்டர் அளவே இருக்கும். குட்டிகள் 0.1 மி.மீ தொடங்கி பெரிய டார்டிகிரேடுகள் 1.2 மி.மீ வரை வளரும்.
ஓர் இனக்குழுவைச் சேர்ந்த உயிரினங்கள் அனைத்திலும் அணுக்களின் எண்ணிக்கை சீராக இருப்பதில்லை அப்படிச் சீராக இருந்தால், அத்தகைய உயிர்களை யூடெலிக் என்றழைப்பார்கள். யூடெலிக் உயிரினமான பாசிப் பன்றிகள் எத்தகைய சூழலிலும் வாழக்கூடியவை. உயரமான மலை உச்சிகளிலும் இவற்றைக் காணமுடியும், ஆழ்கடலிலும் காணமுடியும்.
500 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னிருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பாசிப் பன்றிகள் பல வருடங்களுக்கு உயிர்வாழக் கூடியவை. ஆராய்ச்சியாளர்கள் இவற்றை 300 டிகிரிக்கும் அதிகமான வெப்பத்திலும், -328 டிகிரிக்கும் குறைவான குளிரிலும் வைத்து பரிசோதித்துப் பார்த்தார்கள். இவற்றால் இந்த இரண்டு வகை சூழ்நிலையிலும் வாழ முடிகிறது. அதோடு விடாமல் விண்வெளிக்கும் அனுப்பி சோதித்துப் பார்த்தார்கள். உருண்டையாக உடலை வைத்துக்கொண்டு ஹைபர்னேஷன் என்ற ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று, இவை நேர வரைமுறையின்றி தூங்கி விடுகின்றன. முப்பது வருடங்களாக உறைந்து கிடந்த ஒரு பாசிப் பன்றியை உருக்கிப் பார்த்தபோது இன்னும் உயிரோடு இருந்தது தெரியவந்தது. இதன்மூலம் அவற்றால் சுமார் 30 வருடங்களுக்கு உணவு, தண்ணீர் இன்றி உயிர்வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது வளர்சிதை மாற்றங்களை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு இவை அதிகமான காற்று அழுத்தத்தைக் கூட தாங்கிக் கொள்கிறது.
ஜப்பானில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பாசிப் பன்றிகள் அந்நாட்டில் கண்டுபிடித்த 168-வது டார்டிகிரேட் இனமாகும். இதுவரை உலகில் சுமார் 1000 பாசிப்பன்றி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்புதிய இனத்தின் தோற்றம், உடலமைப்பு ஆகியவை குறிப்பாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவில் கண்டறிந்த இரண்டு இனங்களோடு ஒத்துப்போவதால் அவற்றின் வம்சாவளியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜப்பானின் இந்தப் புதிய உயிரினத்தின் காலில் மட்டும் கூடுதலாக ஒரு மடிப்பு சதை உள்ளது குறிப்பிடத்தக்கது.
உறைபனியை தாங்கிக்கொள்ளும் தன்மையை ஆராய்ந்து புரிந்துகொண்டால், நோய்த் தடுப்பு மருந்துகளை நீண்ட காலங்களுக்கு கெடாது பதப்படுத்தி வைக்க உதவும். உடலின் ஈரப்பதம் உலராமல் பார்த்துக்கொள்ளும் அவற்றின் தன்மையைப் புரிந்துகொள்வது கூட பயிர்கள், உயிரின மாதிரிகள் போன்றவற்றவைப் பராமரிக்க உதவிகரமாக இருக்கும்.
டைனோசர்களை அழித்த நிகழ்வுகளால் கூட அழிக்கமுடியாத இந்த உயிரினங்கள் அதிசயத்தின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். இனிமேல் யாராவது உங்களிடம் பார் உள்ள வரை இருப்பவர்கள் யாரென்று கேட்டால், பாசிப் பன்றிகள் தான் என்று சொல்லுங்கள்.
மதுமதி