மைனாக்கள்(Common Myna). நாம் தினமும் பார்க்கும் பறவைதான். நம்மைச் சுற்றி எங்கும் சாதாரணமாக நடந்து, பறந்து சுற்றித் திரியும் மைனாக்களின் தமிழ் பெயர் நாகணவாய்.
மைனாவின் நாவில் கணவாய் போன்ற பள்ளங்கொண்டுள்ளதால் அதை நா+கணவாய்=நாகணவாய் என்றழைக்கின்றனர்.
மைனா என்றே எல்லோர்க்கும் பழக்கப்பட்டதால் நாமும் அவ்வாறே அழைப்போம்.
பலதரப்பட்ட இடத்தில் பயமின்றி சுற்றித்திரியும் மைனாக்களில் 15 வகைகள் இந்திய துணைக்கண்டத்தில் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் 7 வகை மைனாக்கள் உள்ளன. ஆனால் நாம் இதுவரை சரியாகப் பார்க்காததால் ஒன்று மட்டுமே நம் கண்களுக்கு தெரிகின்றன.
மைனாக்களின் முக்கிய இரை புழு, பூச்சிகள், ஈசல்கள் மற்றும் வெட்டுக்கிளிகள் தான். இது மட்டுமல்லாமல் இச்சி, ஆல், அத்தி, அரசு மற்றும் வேப்பம் பழங்களையும் விரும்பிச் சாப்பிடுகின்றன. பூச்சிகளை முக்கிய உணவாக உட்கொள்ளும் மைனாக்கள் நாளொன்றுக்கு சுமார் 150 கிராம் பூச்சிகளை உணவாக உட்கொண்டு சூழலுக்கும் விவசாயத்திற்கும் நன்மை பயக்கின்றன. மேலும் அதன் எச்சத்தின் மூலம் விதைப்பரவல் செய்து மரங்களையும் பெருகச் செய்கின்றன. இவற்றின் கூடுகளை மரப்பொந்து, வீட்டுக்கூரையின் பொந்துகள் மற்றும் சுவர் இடுக்குகளில் அமைக்கின்றன. கூட்டினுள் கந்தைத்துணிகள், கழிவுத்தாள்கள் மற்றும் புற்கள் போன்றவற்றைத் திணித்து அதனுள் பளபளக்கும் ஊதா நிறம் கொண்ட 4 அல்லது 5 முட்டைகளை இட்டு ஆணும் பெண்ணும் ஒற்றுமையாக அடைகாக்கின்றன.
உலகிலேயே அதிகம் பேசும் திறமையை கொண்டுள்ளது மைனா மட்டுமே.