செம்போத்து (Greater Coucal) என்னும் பறவையைப் பற்றி ஊர்ப்புறங்களில் வாழ்வோருக்குத் தெரிந்திருக்கும். இது குயில் வகையைச் சார்ந்தது. செண்பகக் குயில் எனவும் இது அழைக்கப்படுகிறது.
காக்கையின் பருமன் கொண்ட செம்போத்து நீண்ட வால் உடையது. கருநீல உடலும் செம்பாக்கு நிற இறக்கையும் சிவப்பு நிற கண்களையும் உடையது. இதை செண்பகம் எனவும் செம்பூத்து எனவும் சில இடங்களில் கள்ளிக்காக்கா எனவும் அழைக்கின்றனர்.
செம்போத்து புதர் செடிகள் அடர்ந்த மரங்கள் மற்றும் சிறு மரங்களிலும் இரை தேடும் இயல்புடையது. சில நேரங்களில் திறந்த புல்வெளிகளிலும் தத்தித் தத்தி இரை தேடுவதைக் காணலாம். இதை இயல்பாக நம்முடைய வீட்டுத் தோட்டங்களிலும் காணமுடியும்.
இந்தப் பறவைகள் செடிகளுக்கிடையே இரைதேடும் போது நீண்ட வாலை தரையில் இழுத்துக்கொண்டு இறக்கைகளை பக்கவாட்டில் விரித்தபடியே உடம்பில் அடித்துக் கொண்டே செல்லும். இப்படிச் செய்வதால், புற்கள் மற்றும் புதர்களுக்கிடையே பதுங்கியுள்ள பூச்சிகள் வெளியேறும். அப்படி வெளியேறும் பூச்சிகளை எளிதாக வேட்டையாடுகிறது. இப்படி இரையை லாகவமாகப் பிடிப்பதில் இது திறன்பெற்றுள்ளது.
செம்போத்து கம்பளிப்பூச்சி, சிறுபாம்புகள், பல்லிகள், சுண்டெலிகள் மற்றும் அதிகளவு பூச்சிகள், லார்வாக்களை உணவாகச் சாப்பிடுகின்றன. இதன் கூப்பிடு தொனி “ஊக்…ஊக்…ஊக்” என்றவாறு இருக்கும்.
செம்போத்து அதிக தூரம் பறக்காது. சிறிது தூரம் பறந்தவுடன் தரை இறங்கிவிடும்.
கருவேலமரங்கள் அல்லது வேறு ஏதாவது முட்கள் நிறைந்த மரங்களிலேயே இவை கூடு கட்டுகின்றன. இலைகளாலும் குச்சிகளாலும் வனையப்பட்ட பெரிய கூடை போன்ற கூட்டில் நுழைவுவாயில் பக்கவாட்டில் இருப்பது போன்றே அமைக்கும். கூட்டினுள் சுண்ணாம்பு மேற்பரப்பையுடைய வெள்ளை நிற முட்டைகள் மூன்று அல்லது நான்கு காணப்படும்.
செம்போத்துகள் அடைகாக்கும் காலத்தில் ஆண் பறவை பெண் பறவையின் முன்னால் தனது வாலை விசிறி போன்று விரித்தும் தரையில் அடித்தும் விசித்திரமாக ஆட்டம் ஆடும். மேலும் சிறு பறவைகளின் முட்டைகளையும் குஞ்சுகளையும் திருடித் தின்பதில் கெட்டிக்காரத்தனமாகச் செயல்படும். இந்தச் செயல் உணவுப் போட்டியை போக்கிக் கொள்ளவே ஆகும்.
நாம் திறந்தவெளிகளில் அன்றாடம் காணப்படும் செம்போத்துகள் சூழலியலில் பூச்சிகளை ஒழித்து மனிதனுக்கு நன்மை பயக்கின்றன. ஆனால் மனிதனோ அதை காசநோய்க்குச் சிறந்த மருந்து என நம்பி வேட்டையாடிச் சாப்பிடுகிறான். இது முற்றிலும் தவறான மூடநம்பிக்கையாகும்.
மேலும் செம்போத்தின் கூட்டில் மூலிகையிருக்கும் என அதன் கூடுகளைப் பிய்த்து தண்ணீரில் போடுவதும் மூடநம்பிக்கையே ஆகும்.
அதிக பூச்சிகளை உண்டு சூழலை சமன்படுத்தும் செம்போத்துகளை காக்க முன்வருவோம்.