உலகில் கிட்டத்தட்ட 100 வகையான பச்சோந்திகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுற்றுப்புறத்திற்குத் தகுந்தாற்போல் அடிக்கடி உருமறை தோற்றம் பெற்று வாழ்கின்றன. இதற்காக பச்சோந்திகளின் உடல் செல்களில் சிறப்பு மிக்க நிறமிகள் (Chromatophores)இருக்கின்றன. இந்த செல்கள், அவற்றின் தோல் அடுக்கில் பல அடுக்குகளாகக் காணப்படுகின்றன.
பச்சோந்தியின் தோலானது கண்ணாடி போன்று ஔி ஊடுருவக்கூடியது. தோலின் மேல் அடுக்கில் சிவப்பு (erythrophotes) மற்றும் மஞ்சள் (xanthopgores) நிறமிகளும் அடுத்த அடுக்கில் ஊதா (irdophores) அல்லது வெண்மை (guanophores) புறச் செல்களும் கொண்ட அடுக்கு காணப்படும். ஊதா அடுக்கிற்குக் கீழ் மெலனின் நிறமி செல்களால் ஆன அடுக்கு உள்ளது. சுற்றுப்புறத்தில் ஔி அலைகளில் மாற்றம் ஏற்படும் பொழுது செல்களின் நிறமிகளிலும் மாற்றம் ஏற்படுகின்றது. உதாரணமாக மேல் அடுக்கில் தோன்றும் நிறமி செல்கள் மஞ்சள் நிறமாகக் காணப்பட்டால் பிரதிபலிக்கும் நிறமானது பச்சை நிறமாகும். அதாவது ஊதா நிறமும் மஞ்சள் நிறமும் சேர்ந்து பச்சை நிறமாக பிரதிபலிக்கின்றது.
பச்சோந்திகள் வெப்பம் அதிகமில்லாத காலை நேரத்தில் அதனுடைய தோலை அதிக அடர்வண்ணத்துடன் வைத்திருக்கும்.
தோல்களில் உள்ள மெலனின் நிறமிகளால் காலை நேர வெயிலை உறிஞ்சிக் கொள்வதற்காகவும் பகல் நேர வெப்பத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும் செல்களில் ஒரு வகை மாற்றத்தை ஏற்படுத்தி உதவுகின்றன.
பச்சோந்திகள் தங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் தனக்கான இரையை உருமறை தோற்றத்துடன் மறைந்திருந்து பிடிக்கவுமே நிறம் மாறுகின்றன.