நீர்ப்புலங்களில் காணப்படும் நெடிதுயர்ந்த தாவரமான ‘நாணல் (Poaceae)’ எனப்படும் தாவரக் குடும்பத்தில் கரும்பினத்தைச் சார்ந்ததாகும். இது ஒரு பல பருவச் சிறுசெடி எனலாம். இதன் நிலத்தண்டு படர்ந்து காணப்படும். தடித்த கணுக்களும் உள்ளீடற்ற கணுவிடைப் பகுதிகளும் கொண்ட தண்டுகள் நிமிர்ந்து காணப்படும். குறுகிய இலைத்தாள்களைக் கொண்ட தண்டுகள் மூன்றடி உயரம் வரை இருக்கும். இலைகள் தட்டையாகக் காணப்படும். இதன் பூக்கள் பேனிக்கிள்கள் வகையைச் சார்ந்த வெண்பட்டு போன்றவை.
இந்தத் தாவரங்கள் கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளிலும் வயல்களுக்கு அருகிலும் கூட்டமாக அடர்ந்து காணப்படும். இதன் வேர்ப்பகுதி நீரில் மூழ்கியும் தண்டுப்பகுதியின் பெரும்பகுதி நீருக்கு வெளியேயும் காணப்படுவதால் இதை இருவாழ் நிலை தாவரங்கள் என்றும் அழைக்கலாம்.
நாணல்கள் இந்தியா, மேற்காசியா போன்ற உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவியுள்ளன.
நாணல்களே நீர்புலப் பறவைகளின் சிறந்த வாழிடங்களாக உள்ளன. தட்டான்கள் முட்டை வைக்கவும் பல நீர்புலப் பறவைகள் தங்களது கூடுகளை அமைக்கவும் பாதுகாப்பிற்காகவும் நாணல்களைப் பயன்படுத்துகின்றன. தூக்கணாங்குருவிகள் நாணல்களின் இலை நார்களைக் கொண்டும் கூடமைக்கின்றன.
நாணல்கள் மிகுந்த சதுப்புநிங்களும் நீர்நிலைகளும் இயற்கையின் மடியில் பல்லுயிரிய வளம் கொழிக்கும் பகுதிகளாகும்.