நான் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தபோது குடை போன்று விரிந்த பஞ்சு ஒன்று காற்றில் அசைந்தவாறு மிதந்து வந்தது. உதடு குவித்து அதை ஊதியபோது அது மேலும் உயரச் சென்று மீண்டும் கீழ்நோக்கி வந்தது. அன்று சிறுவனாக அதை ஊதி ஊதி விளையாடி மகிழ்ந்தேன். கடைசியாகக் கீழே விழுந்த பஞ்சினை எடுத்துப் பார்த்தபோது அதன் நுனியில் சிறியதாக ஒரு விதையொன்று தொடுத்து நிற்பதை வியப்போடு பார்த்துள்ளேன்.
இன்று வளர்ந்த பிறகும் அதை அவ்வாறே உற்றுநோக்குகிறேன், அதிசயமாக உள்ளது.
சூழல் வளத்தில் பெரிதும் நன்மை பயக்கும் அதற்கு உத்தாமணி என்றும் வெடத்தலாஞ்செடி என்றும் வேலிப்பருத்தி என்றும் பல்வேறு பெயர்கள் இருப்பதுபோல, இந்த கொடி வகைத் தாவரம் சூழலுக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்கின்றது.
நாங்கள் கிராமங்களில் இரவு நேரங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒன்று சேர்ந்து பல்வேறு விதமான கதைகளைப் பேசி மகிழ்வோம். அதுபோலவே பெரியவர்களும் எங்களுக்கு நிறைய விடுகதைகள் சொல்வார்கள். அதில் ஒன்று வேலிப்பருத்தி பற்றியது.
“உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயுமல்ல, உடம்பெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயுமல்ல, வேலியில் படர்ந்திருக்கும் கோவக்காயுமல்ல. அது என்ன?” என்ற விடுகதைக்கு “படத்தலாங்காய்” என்ற பதில் வரும். அதுதான் வெடத்தலாங்காய் எனப்படும் வேலிப்பருத்தி (Pergularia daemia). இதற்கு “உத்தம கன்னிகை” என்றொரு பெயரும் உண்டு.
உயிர்வேலி எனப்படும் எசலை முட்கள் நிறைந்த வேலிகளில் பல்வேறு கொடிவகைத் தாவரங்கள் படர்ந்து காணப்படும். அதிலும் குறிப்பாக வேலிப்பருத்தி கொடி நிச்சயம் படர்ந்திருக்கும்.
இதய வடிவ இலைகளை, மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிறப் பூங்கொத்துகளையும் மென்மையான முட்களைக் கொண்ட காய்களையும் பிசு பிசுப்பான பாலையும் கொண்ட ஏறுகொடியாகும். இதன் காய்களினுள்ளே விதைகள் மெல்லிய பஞ்சுகளின் நுனியில் ஒட்டியிருக்கும். இவை காய்ந்த பிறகு வெடித்து காற்றின் உதவியால் பறந்து சென்று பல்வேறு இடங்களில் உள்ள வேலிகளில் பரவுகின்றன. எங்கெல்லாம் புதர்ப்பகுதிகள் உள்ளதோ அங்கெல்லாம் முளைத்து, படர்ந்து பரவுகின்றன.
வேலிப்பருத்தியின் இலைகளில் வெந்தயவரியன் (plain tiger) என்ற வண்ணத்துப் பூச்சிகள் முட்டை வைக்கின்றன. இந்த வண்ணத்துப் பூச்சியின் புழு பருவத்தில் (தோற்றுவளரிகள்- Larva) இருக்கும்போது, இந்த இலையின் திசுக்களைத் தின்று வளர்கின்றன. மேலும், முதிர்ந்து காய்ந்த காய்கள் வெடிக்கும்போது அதிலுள்ள மென்மையான பஞ்சுகளை சில சிறிய பறவைகள் கூடமைக்க எடுத்துச் செல்கின்றன. நான் ஒருமுறை பெண் தேன்சிட்டு ஒன்று வேலிபருத்தியின் காயிலிருந்து பஞ்சை எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளேன். இவற்றின் கொடிகளை ஆடுகளும் விரும்பி உண்கின்றன. இது மட்டுமின்றி, இந்த வேலிப் பருத்தியானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் நாட்டு மருந்தகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
சூழலியல்ரீதீயாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கொடி வகைத் தாவரம் தற்போது உயிர்வேலிகள் அற்றுப்போவதால் வேகமாக அருகி வருகின்றன. இதனால் இதைச் சார்ந்து வாழும் மற்ற உயிரினங்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றன.