Home அறிவியல் அறிவோம் காடுகளின் காவல்கார பறவைகள்… மனிதர்களை ஏமாற்ற ஆள்காட்டிகள் கைக்கொள்ளும் வித்தை இதுதான்!

காடுகளின் காவல்கார பறவைகள்… மனிதர்களை ஏமாற்ற ஆள்காட்டிகள் கைக்கொள்ளும் வித்தை இதுதான்!

0
காடுகளின் காவல்கார பறவைகள்… மனிதர்களை ஏமாற்ற ஆள்காட்டிகள் கைக்கொள்ளும் வித்தை இதுதான்!

தமிழகமெங்கும் பொதுவாக இரண்டு வகை ஆள்காட்டிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஒன்று அரளிப்பூ ஆள்காட்டி, மற்றொன்று ஆவாரம்பூ ஆள்காட்டி. ஒன்று சிவப்பு நிற முகப்பகுதியையும் மற்றது மஞ்சள் நிற முகப்பகுதியையும் கொண்டது.

இந்தப் பறவைகளின் முகப்பகுதிகளில் நீண்டு கொண்டிருக்கும் மஞ்சள் நிற, சிவப்பு நிற தசைப்பகுதிகளைக் கொண்டு இவற்றை வகைப்படுத்துகின்றனர். சமவெளிப் பகுதிகளில் வாழும் மற்ற புள்ளினங்களுக்கும் விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் அயலார் வருகையையும் புதிய விலங்கு, பறவை மற்றும் மனிதர்கள் வருகையையும் முதலில் அறிந்து உரத்த குரலில் அறிவிப்பதால் இந்தப் பறவை ஆள்காட்டி என்ற பெயர் பெற்றது.

சிவப்பு மூக்கு ஆள்காட்டி

சிவப்பு மூக்கு ஆள்காட்டி பறவை உருவ அளவில் புறாவை போன்றது. ஆனால், உயரமான மஞ்சள் நிற கால்களைக் கொண்டது. பித்தளைப் பழுப்பு நிற மேற்புறம், வெந்நிற வயிறு மற்றும் தலை, முகம், மார்பு ஆகியவை கருப்பாகவும் இருக்கும். கண்ணுக்கு மேலிருந்து முன்புறமாக அலகு வரை சிவப்பு நிறத்தில் தோல் போன்று தடித்த பாகத்தை உடையது.

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிவப்பு மூக்கு ஆள்காட்டியை விட பருமனில் சற்று சிறிதாகவும் கழுத்து நீளத்தில் சற்று குறைந்ததாகவும் இருக்கும். இறக்கைகளின் மேல்புறம் மற்றும் முதுகு பழுப்பு நிறத்தோடு, தலையில் தொப்பி போட்டது போன்ற கருப்பு நிறத்தோடும் இருக்கும். கருப்பு நிறத்தின் விளிம்பில் வெள்ளை நிறம் காணப்படும்.

ஆள்காட்டிகள் திறந்த வெளிகளாக உள்ள கரடு முரடான தரிசு நிலங்களிலும் உழுத நிலங்களிலும் நீர் உள்ள குளம் குட்டைகளின் கரைகளிலும் காணப்படும்.

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

இந்தப் பறவைகளின் கூடுகள் உருமறைவானவை. தரையில் தனது கால்களால் பள்ளம் தோண்டி மண் உருண்டைகளைச் சேகரித்துச் சேர்த்து அதனுள் முட்டை வைத்துவிடும். சாதாரணமாகக் காண்பது கடினமான ஒன்று.

மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலும் ஆள்காட்டிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. நான்கு முட்டைகள் இட்டு அடைகாக்கும். முட்டைகள் தரையின் நிறத்திற்கேற்ப ஒன்றி விடுவதால் காண்பது சிரமம்.

இவற்றின் உணவு, மனிதனின் அன்றாட உணவுப் பொருட்களை அழிக்கும் புழு, பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளி போன்றவையே. அவற்றை உண்டு மனிதனுக்கு நன்மை பயப்பதோடு, நத்தைகளையும் உணவாகக் கொள்கின்றன.

Lapwing

ஆள்காட்டிகள், ஆளை பிறருக்குக் காட்டுவதில் மட்டுமின்றி, ஆளை ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவை. முட்டைகளின் மீது ஒரு பறவை அடைகாக்கும்போது மற்றொன்று உயரமான இடத்தில் ஆட்கள் வருவதை மற்றொன்றுக்கு உணர்த்திவிட்டு மெல்ல நகர்ந்து எதிர் திசையில் அழைத்துச் சென்றுவிடும். மேலும் இரு பறவைகளும் சேர்ந்து கூடே இல்லாத இடத்தில் இருப்பது போன்று கத்திக்கத்தி தாக்குதல் நடத்தும். கூடு அன்மையில் உள்ளது போலவே கத்தும். ஆனால் கூடு எதிர் திசையில் இருக்கும்.

காடுகளில் ஆள்காட்டிகள் சப்தம் கேட்பதே அழகு. நாங்கள் எந்தப் பறவையைத் தேடிப் போனாலும் பார்பதற்கு ஏற்ற சூழல் அமையாமல் போவதற்கு ஆள்காட்டிகளே காரணமாகிவிடும். ஆகையால், காடுகளின் காவல்காரப் பறவைகள் என்றும் ஆள்காட்டிகளைக் குறிப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here