Home அறிவியல் அறிவோம் 300 அடி தூரம் வரை பறக்கும் அரிய வகைப் பாம்பு… கல்லாறில் பார்த்த பறக்கும் பாம்பு!

300 அடி தூரம் வரை பறக்கும் அரிய வகைப் பாம்பு… கல்லாறில் பார்த்த பறக்கும் பாம்பு!

0
300 அடி தூரம் வரை பறக்கும் அரிய வகைப் பாம்பு… கல்லாறில் பார்த்த பறக்கும் பாம்பு!
Image credit Mehedi sundarban wikimedia commons-Flying snake

பறக்கும் பாம்புகள் (Flying Snake, Chrysopelea ornata). பாம்புகள் பறக்கும் என்று சொல்வதால் அவற்றுக்கு இறக்கைகள் இருக்கிறதா என்றெல்லாம் கேட்காதீர்கள். உயரங்களில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு காற்றிலேயே சறுக்கிச் செல்லும் இந்தப் பாம்புகள் பறக்கும் பாம்புகள் என்றழைக்கப்படுகின்றன.

இவை மிகவும் அழகானவை. இந்தப் பாம்புகள், வழவழப்பான செதிள்களோடு, கறுப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டிருக்கும். பல வண்ணக் கலவையாக காணப்படும் இவற்றின் நீளம் 2 மீட்டர் வரை இருக்கும்.

பறக்கும் பாம்பு, Image credit Dr.R.S.Pradeep Raj/wikimedia commons

பறக்கும் பாம்பு மிகவும் வேகமாகச் செல்லக்கூடிய, மிகுந்த விரைதிறன் கொண்டது. தலையில் வர்ணப்பட்டைகள் கொண்டு விளங்கும் இந்தப் பாம்புகள் மலைப்பகுதிகளில் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் வாழ்கின்றன.

பகலில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இந்த வகைப் பாம்புகள் தங்களை வேட்டையாட வரும் பகை விலங்குகளிடமிருந்து மிக உயரமான பகுதியிலிருந்து குதித்து மரங்களுக்கிடையில் மிக வேகமாக விமானம் போல் சருக்கிச் சென்றுவிடும். இவ்வாறு சுமார் முன்னூறு அடி தூரம் மரக்கிளைகளுக்கிடையில் சென்றுவிடும். பதிவு செய்து படம் பிடிப்பதும் மிக அரிதானது.

பறக்கும் பாம்புகளில் பெண் பாம்பு 6 முதல் 12  முட்டைகள் வரை இடும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இவை முட்டையிடுகின்றன.

Western Ghats

சிறு பறவை இனங்கள், பல்லிகள், தவளைகள் போன்றவை இவற்றின் உணவுப் பட்டியலில் இருக்கின்றன. இந்தப் பாம்புகளுடைய வாயின் பின் பகுதியில் உள்ள நச்சுப் பற்களில் உள்ள லேசான நஞ்சைப் பயன்படுத்தி அதன் இரையைச் செயலிழக்கச் செய்து அப்படியே விழுங்கிவிடுகின்றன.

தமிழ்நாட்டில் அரிதாகவே காணப்படும் இதை, திருநெல்வேலியில் உள்ள களக்காட்டில் ஒரே ஒருமுறை உயிருடன் பிடித்துள்ளார்கள்.

பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக இருக்கும் இந்தப் பாம்புகள், மனிதனைக் கொள்ளும் அளவிற்கு நஞ்சு இல்லாதவை. அப்படியே நம்மைக் கடித்தாலும் பயம் கொள்ளாமல் மருத்துவமனை சென்று முதலுதவி செய்து கொள்ளலாம். இது கடிப்பதால் உயிர் போகும் அளவுக்கு ஆபத்து நேராது.

இந்த அரிய வகை பறக்கும் பாம்பை, கல்லாறு பழத்தோட்டத்தில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எந்த இடையூறும் செய்யாமல் பேரமைதியாக மிகவும் அருகில் துணிந்து அமர்ந்தும் படுத்தும் படம் எடுத்தது எனது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு.

பறக்கும் பாம்புகள் என்னும் இயற்கையின் அற்புதத்தைப் பார்த்து மகிழும் வாய்ப்பு இனி எப்போது  கிடைக்குமோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here