Home அறிவியல் அறிவோம் தன் குஞ்சுகளுக்கு உணவூட்ட 160கி.மீ பறக்கும் கூழைக்கடா… பறவைகள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!

தன் குஞ்சுகளுக்கு உணவூட்ட 160கி.மீ பறக்கும் கூழைக்கடா… பறவைகள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!

0
தன் குஞ்சுகளுக்கு உணவூட்ட 160கி.மீ பறக்கும் கூழைக்கடா… பறவைகள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!

பறவை என்றுமே நம் கண்களுக்கு அபூர்வமாகத்தான் தெரியும். ஒவ்வொரு பறவையின் உடல் அமைப்பு, அவற்றின் இனப்பெருக்க முறை, வாழ்வியல் என்று அனைத்துமே மனித இனத்தைக் காலம் காலமாகப் பிரம்மிப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், பல்வேறு பறவை இனங்கள் தங்கள் குஞ்சுகளை வளர்ப்பதிலும் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளன.

முட்டையின் நிறங்கள்

பல்வேறு பறவை இனங்களின் முட்டைகளும் பலவிதமான நிறங்களில் காணப்படுகின்றன. இந்த நிறங்கள் அனைத்துமே அவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவானவை. பச்சை, சிவப்பு, பழுப்பு, வெள்ளை, நீலம் மற்றும் அரை வெள்ளை என்ற நிறங்களோடு அவற்றில் புள்ளிகள், தெறிப்புகள், சிறுகோடுகள் ஆகியனவும் முட்டைகளில் அமைந்திருக்கும். இந்த அமைப்புகள், பறவை முட்டைகளை அவற்றின் வாழ்விடங்களில் உள்ள புல், மணல், கல் போன்றவற்றுக்கு இடையே மற்ற யாரும் காண இயலாதவாறு உருமறைத் தோற்றம் பெற்று, பாதுகாப்பாக மறைந்திருக்க உதவுகிறது.

duck eggs

இன்னும் சில பறவைகள் தங்களது முட்டைகளை வித்தியாசமாகப் பாதுகாக்கின்றன. ஆப்பிரிக்க உள்ளான் என்ற பறவையொன்று, தான் முட்டையிட்டவுடன் அந்த இடத்தின் குப்பை, மண், சகதி போன்றவற்றில் முட்டையைப் புரட்டி எடுக்கின்றன. நம்ம ஊர் குயில்கள் கூடு கட்டத் தெரியாததால் தனது முட்டையை எந்தக் கூட்டில் வைக்கிறதோ  அந்தப் பறவையின் முட்டையைப் பார்த்து அதே நிற, அமைப்பு, வடிவத்திலேயே முட்டையிடுகிறது. சில பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் முட்டையிடுகின்றன. சில பறவைகள் அதிகபட்சமான முட்டைகளை வைக்கின்றன. இவை பெற்றோர் பறவைகளின் உடல் அகல நீளம், வெப்பமூட்டும் திறன் போன்றவற்றை பொறுத்தது.

குஞ்சு வளர்ப்பும் பராமரிப்பும்

1938-ல் பறவையியல் ஆய்வாளர்கள் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை கண்டுபிடித்தனர். அந்தக் கேள்வி, சில வகைப் பறவை முட்டைகளின் மஞ்சள் கரு பெரிதாகவும் சில வகைப் பறவைகளின் மஞ்சள் கரு சிறிதாகவும் உள்ளது ஏன்?

குறிப்பாக வாத்து முட்டையின் மஞ்சள் கரு 50% பெரிதாகவும் கழுகு முட்டையின் மஞ்சள் கரு 20% சிறிதாகவும் இருக்கின்றன. இதற்கு இயற்கையானதொரு வியக்கத்தக்க காரணத்தையும் புரிந்து கொண்டனர்.

eagle nest

வாத்துக்கள் தரையில் முட்டையிடுவதால் அதற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகின்றது. ஆகவே கரு வேகமாக வளர வேண்டிய நிலைக்கு ஆதரவாக முட்டையின் மஞ்சள் கரு பெரிதாக இருப்பதால், பொரிந்து குஞ்சு வெளியானவுடன் ஒரு மணி நேரத்தில் தாயுடன் கிளம்பவும் தண்ணீரில் இறங்கவும் தானாக உணவு தேடவும் பகை கண்டால் பதுங்கிக் கொள்ளவும் தயாராகி விடுகின்றன. இது முன்-முதிர் குஞ்சுகளாகும்.

மர உச்சியில் கூடுகட்டி உயிரினங்களை வேட்டையாடி வாழும் அச்சமற்ற கழுகின் முட்டைக்கு ஆபத்து மிகக் குறைவு. எனவே, இதன் மஞ்சள் கரு சிறியதாக இருப்பது குஞ்சின் வளர்ச்சி வேகத்தைக் குறைப்பதால், அவை கூட்டை விட்டு பல நாட்களுக்கு வெளியேற இயலாத நிலையில் நிர்க்கதியாக பிறக்கலாம். குஞ்சுகளின் உடல்  தூவிகளற்று, நிற்க முடியாமல், கண்கள் மூடிய நிலையில் கூட்டில் கிடக்கின்றன. பெற்றோர் உணவூட்டி வளர்த்துப் பெரிதாக்கிவிட்ட பின்னர், பறந்து பழகி பயிற்சி பெறுகின்றன. இவை பின்-முதிர் குஞ்சுகளாகும்.

கூழைக்கடா

இதில் மற்றொரு சிறப்பம்சமாக காட்டு வாத்துக் குஞ்சுகள் பொரிந்து வெளிவந்தவுடன் சுறுசுறுப்பாக ஓடியாடத் தேவையான ஊட்டச்சத்து எங்கிருந்து கிடைக்கிறது என்றால், கடைசி சேமிப்பாக அவற்றின் இரைப்பையில் கொஞ்சம் மஞ்சள் கரு இருப்பதே காரணம். இதனால் உண்மையான பசி எடுக்கும் வரை அவை ஓடியாடி உணவு தேடவும் தாயைக் கூவி அழைக்கவும் இயலுகிறது. இத்தகைய முறை, உப்புக்கொத்திகள் மற்றும் உள்ளான் போன்ற பறவைகளில் மட்டும் அல்லாமல் பெரும் பறவையான கான மயில், நெருப்புக் கோழி ஆகியவற்றிலும் இருக்கிறது. இதற்கு மாறாக மஞ்சள் கரு குறைவாக உள்ள முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் வழக்கமாக கண் திறவாத நிலையிலயே இருக்கும். இதற்கு ஏற்றாற்போல் பெற்றோர்கள் அந்த குஞ்சுகளைக் காப்பாற்றத் தேவையானவற்றைக் கொடுக்க, எல்லாவித ஆயத்தங்களோடும் தம்மை தயார்படுத்திக் கொள்கின்றன.

குஞ்சுகளுக்கு உடனுக்குடன் இரையூட்டுதல், கதகதப்பூட்டுதல், நனையாது மூடிக்கொள்ளுதல் எனப் பல உதவிகளை தாய்ப் பறவை செய்யவேண்டிவரும். பின்-முதிர் குஞ்சுகளுக்குத் தொடர்ந்து உணவு தேடித் தருவதும் பாதுகாப்பதும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

உணவின் தேவை

கூட்டுப் பருவத்தின்போது, பறவை குஞ்சுகளுக்கு நிறைய உணவு தேவை. உதாரணமாக ஒரு குயிலின் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவரும் போது 2 கிராம் இருக்க, 3 வாரத்தில் அது 100 கிராமாக வளர்ச்சியடைகிறது என்றால் எவ்வளவு உணவு தேவை என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

மேலும் குஞ்சுகள் வளர்ச்சிக்கு இரையில் அதிகப் புரதச்சத்து தேவையுள்ளதால் தாவர உண்ணிகள் கூட தாங்கள் குஞ்சுகளை விரைவாக வளர்க்க புழுப் பூச்சிகளை உணவாக ஊட்டுகின்றன. இதனால் பெற்றோர்களின் வேலை கடினமாகிறது.

Golden eagle

ஈப்பிடிப்பான் மணிக்கு 33 முறை வாய் நிறைய பூச்சிகளைப் பிடித்து வந்து தனது 4 குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன. ஒரு சோடி பட்டாணிக் குருவி 18 நாட்களில் தமது பசி மிகுந்த 10 குஞ்சுகளுக்கு 11000 தடவை கம்பளிப்புழுக்களைக் கொண்டு வந்து ஊட்டுகின்றன. நீர்ப் பறவைகள் பொதுவாக மீன்களையே தமது குஞ்சுகளுக்கு இரையாகத் தருகின்றன. கூழைக்கடாக்கள் தம் குஞ்சுகளுக்கு 160 கி.மீ தொலைவு கூட பறந்து சென்று மீன் பிடித்து வருகின்றன. ஒரு சாதாரண கூகை ஓர் இரவில் தனது குஞ்சுகளுக்கு 4 முதல் 6 தடவை வரை இரை கொடுக்கின்றன.

பறவையின்றி மனிதரில்லை

பூச்சிகள், மீன்கள், ஊர்வன, தானியம், பழங்கள், புற்கள் எனப் பலவற்றை பறவைகள் உணவாகக் கொள்கின்றன. இருப்பினும், இவற்றில் பூச்சியுணவே 70 விழுக்காடு பங்கு வகிக்கிறது.

Pelican

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் அதிகளவில் உற்பத்தியாகும் பூச்சிகளை தங்களது உணவுக்காகவும் குஞ்சுகளின் இரைக்காகவும் பறவைகள் வேட்டையாடுவதால் பூச்சிகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தான் நமக்கும் தானியங்களை எளிதில் உற்பத்தி செய்ய ஏதுவான சூழல் நிலவுகிறது.

“பறவைகள் இல்லையேல் மனிதர்கள் இல்லை” என்ற சாலிம் அலியின் கூற்று எவ்வளவு வலிமையானது என்பதை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்வதற்கு, இதுவே சிறந்த உதாரணம் என்றும்கூடச் சொல்லலாம்.

பறவைகளை காப்போம், பல்லுயிரிய வளங்களைப் பெருக்குவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here