வறண்ட புதர் காடுகளில் உள்ள திறந்தவெளிகளில் கௌதாரிகளைக் (Grey francolin) காணலாம். 1890-இல் ஆங்கில வனத்துறை அந்தமான் தீவுகளில் இந்தப் பறவைகளை அறிமுகம் செய்தது.
பழுப்பு வண்ணத்தில் கரிய குறுக்குக் கோடுகளுடன் தொண்டையில் மங்கிய மஞ்சள் நிற வளையத்தோடு காணப்படும். இதன் சிவந்த கால்கள் குதி முட்களுடன் உருண்டு திரண்டு நம் வீட்டுக் கோழியை விடச் சற்று சிறிய அளவில் இருக்கும். ஆண் கௌதாரி பெண்னைவிட சற்றுப் பெரியது. நான்கு முதல் ஆறு வரை சிறு சிறு குழுக்களாக திறந்தவெளிக் காடுகளில் அங்கும் இங்கும் ஓடியவாறு இரை தேடிக் கொண்டிருக்கும்.
தானியங்கள், பூச்சிகள், சில பழங்கள், கரையான்கள், ஈக்களின் வளர் புழுக்கள் போன்றவை இவற்றுக்கு உணவாகின்றன. இந்த வளர் புழுக்களுக்காக மனிதனின் உலர்ந்த மலம், மாட்டு சாணங்கள் போன்றவற்றைக் கிளறுகின்றன. சிறு சப்தம் கேட்டாலும் தரையோடு பதுங்கிக்கொள்ளும். அதற்கு ஏற்றார்போல அதனுடைய நிறம் உருமறை தோற்றத்தைப் பெற்றுள்ளது. நாம் நிற்கும் இடத்திற்கு அருகிலேயே படுத்திருந்தாலும் கூட இவற்றை நாம் காண இயலாது. பறந்து ஓடும் போதுதான் நமக்குத் தெரியும்.
கௌதாரிகள் பெரும்பாலும் நடப்பதையே விரும்புகின்றன. கட்டாயமாகப் பறக்க நேரிட்டாலொழிய கௌதாரிகள் பறப்பதில்லை. அப்படியே பறந்தாலும் அதிக தூரம் பறப்பதில்லை. சில நூறு அடிகள் பறந்த பின் தரையிறங்கி வேகமாக ஓடி மறைந்து கொள்ளும். இரவு நேரங்களில் முள் செடிகளிலேயே அடைகின்றன. கௌதாரிகளின் கூப்பிடு தொனி மிகவும் அழகானது. காட்டீஜா… காட்டீஜா… காட்டீஜா., எனக் கேட்கும் குரலில் ஆண், பெண் இரண்டின் குரலும் கலந்து ஒலிக்கும்.
கௌதாரிகளின் கூடுகள் வறண்ட தரையில் முட்செடிகளுக்கு இடையில் புற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். இதில் 4 முதல் 8 முட்டைகள் வரை இட்டு குஞ்சு பொறிக்கின்றன. முட்டைகள் மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும்.